ஆழியாறில் காட்டு யானை சுற்றி திரிவதால் சுற்றுலா பயணிகள் கவனமாக செல்ல வேண்டும்
ஆழியாறில் காட்டு யானை சுற்றி திரிவதால் சுற்றுலா பயணிகள் கவனமாக செல்ல வேண்டும்.
பொள்ளாச்சி
ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒற்றை காட்டு யானை ஆழியாறு வனத்துறை சோதனைக்குச்சாவடிக்கு அருகில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு வந்தது. இதையடுத்து வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் பூங்கா பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாக பூங்காவில் முகாமிட்டு இருந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. இதன் காரணமாக வனத்துறையினர் காலை, மாலை நேரங்களில் வால்பாறை சாலையில் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ஆழியாறில் நேற்று (நேற்று முன்தினம்) முதல் ஒற்றை காட்டு யானை வண்ணத்துப்பூச்சி பூங்கா பகுதியில் முகாமிட்டு உள்ளது. எனவே யானை வால்பாறை சாலையை கடந்து ஆழியாறு அணைக்கு தண்ணீர் குடிக்க வரக்கூடும். எனவே சுற்றுலா பயணிகள் வால்பாறை சாலையில் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். யானை நிற்பதை பார்த்தால் தொந்தரவு செய்ய கூடாது. அருகில் சென்று செல்போனில் புகைப்படம் எடுப்பது, சத்தம் போடுவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். யானை நிற்பதை பார்த்தால் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.