போக்குவரத்து நெரிசலில் சிக்கி சுற்றுலா பயணிகள் தவிப்பு
வால்பாறை நகரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சுற்றுலா பயணிகள் தவித்தனர்.
வால்பாறை
வால்பாறை நகரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சுற்றுலா பயணிகள் தவித்தனர்.
வார விடுமுறை நாட்கள்
தமிழகத்தில் கடந்த 29-ந் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதற்கு மறுநாள் மட்டும் வேலை நாள் இருந்தது. அதன்பிறகு வார விடுமுறை நாட்கள் வந்தது. இதையொட்டி சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
கோவை மாவட்டம் வால்பாறையில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால், குளு குளு காலநிலை நிலவுகிறது. இதை அனுபவிக்க வார விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்தது. குறிப்பாக தமிழகத்தில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் குறைவாக இருந்தபோதும், கேரளவில் இருந்து அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். அவர்கள் வால்பாறை பகுதியில் முகாமிட்டு கூழாங்கல் ஆறு, சோலையாறு அணை உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.
சோலையாறு அணை
குறிப்பாக கடந்த மாத இறுதி நாட்களில் நீர்மட்டம் குறைந்ததால் வெறிச்சோடி கிடந்த சோலையாறு அணை பகுதியில், தற்போது நீர்மட்டம் உயர்ந்து வருவதால், அதை காண வந்த சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருப்பதை காண முடிந்தது.
பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்ததால், வால்பாறை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஆமை வேகத்தில் வாகனங்களை இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். எனினும் நீண்ட நேரம் தாமதம் ஆனதால், சுற்றுலா பயணிகள் தவித்தனர்.