வனவிலங்குகளை படம் எடுக்கும் சுற்றுலா பயணிகள்;கண்காணிக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்


வனவிலங்குகளை படம் எடுக்கும் சுற்றுலா பயணிகள்;கண்காணிக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Oct 2023 12:15 AM IST (Updated: 11 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் ஆபத்தை உணராமல் வனவிலங்குகளை சுற்றுலா பயணிகள் புகைப்படம், வீடியோ எடுக்கின்றனர். இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறையினரை சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நீலகிரி

ஊட்டி: ஊட்டியில் ஆபத்தை உணராமல் வனவிலங்குகளை சுற்றுலா பயணிகள் புகைப்படம், வீடியோ எடுக்கின்றனர். இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறையினரை சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்

ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கவும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இங்கு ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் முதலாவது சீசனும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசனும் நடைபெறுகிறது. அதன்படி தற்போது 2-வது சீசன் களை கட்ட தொடங்கி உள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

காட்டெருமையை புகைப்படம், வீடியோ...

இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதியை ஒட்டிய சாலையில் உலா வரும் காட்டுயானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளின் ஆபத்தை உணராமல் வாகனங்களுடன் அவைகளின் அருகிலேயே சென்று புகைப்படம், வீடியோ எடுக்கின்றனர். குறிப்பாக வாகனங்களில் இருந்து கீழே இறங்கி வந்து அவைகளின் அருகே சென்று புகைப்படம், வீடியோ, செல்பி எடுக்கின்றனர். இதனால் காட்டுயானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் சுற்றுலா பயணிகளை தாக்கும் அபாயம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் தொட்டபெட்டா தேயிலை பூங்கா பகுதி தும்மனட்டி சந்திப்பு சாலையில் உள்ள தேயிலை தோட்டத்தில் காட்டெருமை கூட்டம் மேய்ந்து கொண்டிருந்தன. இதில் ஒரு காட்டெருமை சாலைக்கு வந்தபடி சுற்றித்திரிந்தன. இதனை பார்த்த சுற்றுலா பயணிகள் சிலர் தங்களது வாகனத்தை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு காட்டெருமை அருகே சென்று செல்போனில் அதனை புகைப்படம், வீடியோ எடுத்துள்ளனர்.இதனால் காட்டெருமை அவர்களை விரட்டி தாக்கும் சூழ்நிலை நிலவியது. மேலும் காட்டெருமை சாலையின் நடுவே வந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது. தொடர்ந்து வாகனங்களில் வந்த சிலர், காட்டெருமையை அங்கிருந்து விரட்டி விட்டனர். இதையடுத்து தங்களது வாகனங்களில் சுற்றுலா பயணிகள் சென்றனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதைப்பார்த்த உள்ளூர் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-'காட்டெருமைகள் மிகவும் சாதுவாக இருக்கும். ஆனால் சுற்றியுள்ள சூழ்நிலை தனக்கு எதிராக மாறுகிறது என்று உணர்ந்தால், புலி வேகத்தில் வந்து பாய்ந்து முட்டி தள்ளி சென்று விடும். இது வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு தெரிவது கிடையாது. எனவே காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் அருகே சென்று புகைப்படம், செல்பி, வீடியோ எடுப்பதை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும். இதனை வனத்துறையினரும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


Next Story