கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகள்... 10 கி.மீ. தூரத்துக்கு வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்


கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகள்... 10 கி.மீ. தூரத்துக்கு வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்
x

கொடைக்கானலின் நுழைவு வாயிலான வெள்ளி நீர் வீழ்ச்சியில் இருந்து சுமார் 10 கி.மீ. துரத்திற்கு சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

கொடைக்கானல்,

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2-வது வாரத்தில் கோடைமழை பெய்யும். சித்திரையும், குளு, குளு சீசனும் கொடைக்கானலில் ஒன்றாக தொடங்கும். அந்த வகையில் நேற்று கொடைக்கானலில் கோடை சீசன் தொடங்கியது. நேற்று முழுவதும் கொடைக்கானலில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தபடி இருந்தது. கோடை சீசன் தொடங்கிய நிலையில், ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படை எடுத்து வருகின்றனர்.

பொதுவாகவே கொடைக்கானலில் வார விடுமுறை நாட்கள் மற்றும் கோடை விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம். இந்த நிலையில் ரம்ஜான் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு ஆகிய விடுமுறை நாட்கள் காரணமாக கடந்த மூன்று தினங்களாகவே கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில் இன்று கொடைக்கானலின் நுழைவு வாயிலான வெள்ளி நீர் வீழ்ச்சி தொடங்கி பெருமாள் மலையை தாண்டி சுமார் 10 கி.மீ. துரத்திற்கு சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது தொடர்பான டிரோன் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குறித்த நேரத்திற்கு சுற்றுலா தலங்களை காண முடியாமலும் இதரப் பணிகளுக்கு செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.


Next Story