காணும் பொங்கலையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் - போலீஸ் டி.ஜி.பி. நேரில் ஆய்வு


காணும் பொங்கலையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் - போலீஸ் டி.ஜி.பி. நேரில் ஆய்வு
x

காணும் பொங்கலையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு

காணும் பொங்கல் தினத்தில் பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு சென்று காணும் பொங்கலை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில் சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு காணும் பொங்கலையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதியை ஒட்டி உள்ள திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு நேற்று காலையிலேயே வரத் தொடங்கினர்.

காணும் பொங்கல் என்பதால் பூங்கா காலை 8 மணிக்கே பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் வண்டலூர் பூங்கா முழுவதும் எங்கு பார்த்தாலும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

பூங்காவில் உள்ள மனித குரங்குகள, மனித குரங்கு குட்டி ஆதித்யா தனது தாய், தந்தையிடம் செய்யும் சேட்டைகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் ரசித்து பார்த்து கைதட்டி ஆரவாரம் செய்தனர். பொங்கல் பண்டிகை என்பதால் பூங்காவில் உள்ள மனித குரங்குகளுக்கு ஊழியர்கள் சாப்பிடுவதற்காக கரும்பு துண்டுகளை கொடுத்தனர். அந்த கரும்பு துண்டுகளை மனிதர்களை போல அழகாக கடித்து சாப்பிடும் காட்சிகள் பூங்காவுக்கு வந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அதே போல பொதுமக்கள் பார்வைக்காக விடப்பட்டிருந்த 4 வெள்ளை புலிகளும் அதனுடைய இருப்பிடத்தில் உள்ள மூங்கில் மரத்தை சுற்றி சுற்றி ஒடி விளையாடும் காட்சிகளையும், புலிகள் கொஞ்சி விளையாடுவதையும் பார்வையாளர்கள் நீண்ட நேரமாக நின்று பார்த்து ரசித்து கொண்டிருந்தனர்.

மேலும் பூங்கா நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளான காண்டாமிருகம், காட்டு மாடு, மான்களுக்கு ஊழியர்கள் உணவு அளிக்கும் நேரடி காட்சிகளையும், யானைகள் குளிக்கும் காட்சிகளையும் பார்வையாளர்கள் ரசித்து பார்த்தனர்.

மேலும் பூங்காவில் உள்ள சிங்கங்கள், புலிகள், சிறுத்தைகள், காண்டாமிருகம், நீர்யானை, பறவைகள், முதலைகள் உள்ளிட்ட அனைத்தையும் பார்த்து ரசித்து பொதுமக்கள் பூங்காவிலேயே காணும் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர். காணும் பொங்கலையொட்டி பூங்காவில் நுழைவு சீட்டு வழங்கும் இடத்தில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும், எளிதாக பொதுமக்கள் நுழைச்சீட்டை பெறும் வகையில் 20 சிறப்பு டிக்கெட் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. குழந்தைகள் தொலைந்து போகாமல் இருக்க 8 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கையில் பெற்றோரின் செல்போன் எண் எழுதப்பட்ட காகித அட்டை கட்டப்பட்டது. மேலும் பூங்காவில் பல்வேறு இடங்களில் குடிநீர் உள்ளிட்ட வசதிகளும், அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

பூங்காவில் வனத்துறை மற்றும் போலீசார் உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பூங்காவுக்கு வருகை தந்த பொதுமக்கள் அனைவரையும் நுழைவாயில் பகுதியில் ஊழியர்கள் சோதனை செய்த பிறகு பூங்காவுக்குள் அனுமதித்தனர். கண்காணிப்பு கேமரா மூலம் பொதுமக்களின் நடமாட்டத்தை ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

காணும் பொங்கலையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு பல்வேறு பகுதியில் இருந்து மாநகர பஸ்கள், தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கடந்த 14-ந்தேதி 7 ஆயிரத்து 630 பேர், 15-ந்தேதி பொங்கல் அன்று 17 ஆயிரத்து 762 பேரும், 16-ந்தேதி மாட்டு பொங்கல் அன்று 34 ஆயிரத்து 183 பேரும், நேற்று காணும் பொங்கலன்று 31 ஆயிரத்து 440 பேரும் வந்தனர்.

காணும் பொங்கலையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று காலை திடீரென ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியதாவது:-

காணும்பொங்கலையொட்டி பொதுமக்கள் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று வருவார்கள். எனினும் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்கள், வண்டலூர் உயிரியல் பூங்காவில் அதிக அளவில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல சென்னை மெரினா கடற்கரை, கன்னியாகுமரி கடற்கரை உள்ளிட்ட பல்வேறு கடற்கரை பகுதிகளில் உயிரிழப்புகள் தடுப்பதற்கான போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

போக்குவரத்து நெரிசலின்றி பொதுமக்கள் சென்று வருவதற்காக ஊட்டி, கொடைக்கானல் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

குறுகிய விலங்குகள் இருப்பிடங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக பூங்கா நிர்வாகம் 8 இருப்பிடங்கள் மூடப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் பூங்காவிற்கு வந்த குழந்தைகள் பலர் பூங்காவில் உள்ள மீன் அருங்காட்சியகம், பாம்பு இல்லம், இரவு விலங்குகள் இருப்பிடங்களை பார்ப்பதற்காக ஆர்வத்துடன் சென்று பார்த்தபோது மூடப்பட்டிருந்ததால் குழந்தைகளுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது. காணும் பொங்கலையொட்டி வண்டலூர் பூங்காவுக்கு வருகை தந்த பெரும்பாலும் குழந்தைகளை தவிர அனைவரும் கேமரா உள்ள செல்போனை வைத்திருந்தனர். பூங்கா நிர்வாகம் செல்போனுக்கு கட்டாயமாக ரூ.25 கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தது. இதனால் நுழையை சீட்டு பெறும் இடத்தில் பொதுமக்கள் ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அடிக்கடி டிக்கெட் கவுண்ட்டர் பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

பொதுமக்கள் அதிகமாக வருகை தரும் இது போன்ற சுற்றுலா தலங்களில் செல்போனுக்கு ரூ.25 கட்டணம் வசூலிப்பது நடுத்தர மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story