குளத்தில் மீன்பிடி திருவிழா


குளத்தில் மீன்பிடி திருவிழா
x

குளத்தில் மீன்பிடி திருவிழா நடந்தது.

திருச்சி

மணப்பாறை:

மீன்பிடி திருவிழா

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆனாம்பட்டியில் செல்லான்குளம் உள்ளது. ஆனாம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களின் பிரதான நீராதாரமாக விளங்கும் இக்குளத்தில் 15 ஆண்டுகளுக்கு பின்னர், கடந்த 2 ஆண்டுகளாக பெய்த மழையின் காரணமாக முழுவதுமாக நீர் நிரம்பியது. இந்நிலையில் தற்போது கோடை வெயிலின் காரணமாக குளத்தில் நீரின் அளவு வெகுவாக குறைந்தது.

இதையடுத்து அந்த குளத்தில் கிராம மக்கள் சார்பில் மீன்பிடி திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று சாம்பட்டி ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் வெள்ளை வீசுதல் என்று கிராம வழக்கப்படி சொல்லப்படும் வெள்ளை நிறத்துண்டை தலைக்குமேல் சுழற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

பொதுமக்கள் மகிழ்ச்சி

இதைத்தொடர்ந்து குளத்தின் கரையில் வலை, கச்சா, கூடை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் காத்திருந்த மீன்பிடி ஆர்வலர்கள் போட்டி போட்டு குளத்தில் இறங்கி மீன் பிடிக்க தொடங்கினர். இதில் விரால், கெண்டை, கெளுத்தி, கட்லா, ஜிலேபி என நாட்டு வகை மீன்கள் அனைவருக்கும் சிக்கியது.

மேலும் எதிர்பார்த்த அளவு மீன்கள் சிக்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மீன்பிடி திருவிழாவில் சுற்றுப்புற பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.


Next Story