பாபநாசம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
தொடர் விடுமுறையையொட்டி பாபநாசம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
விக்கிரமசிங்கபுரம்:
தொடர் விடுமுறையையொட்டி பாபநாசம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
தொடர் விடுமுறை
பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதாலும், ஆன்மிக அருவியாக இருப்பதாலும், இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது வெளுத்து வாங்கும் கோடை வெயில் மற்றும் தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட தொடர் விடுமுறையையொட்டி நேற்று அகஸ்தியர் அருவிக்கு வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் கார், வேன்களில் வந்து குவிந்தனர்.
குளித்து மகிழ்ந்தனர்
அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். குற்றாலம் அருவியில் நீர்வரத்து இல்லாததால், அங்கு வந்த சுற்றுலா பயணிகளும் அகஸ்தியர் அருவிக்கு வந்து குளித்தனர்.
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், ''அகஸ்தியர் அருவியில் குளிப்பதற்கு இனிமையாக இருக்கிறது. ஆனால் அங்கு செல்வதற்கு சாலை மிகவும் மோசமாக உள்ளது. மேலும் நுழைவு கட்டணத்தையும் குறைக்க வேண்டும்'' என்று தெரிவித்தனர்.