தொடர் விடுமுறை காரணமாக கோத்தகிரி நேரு பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்- செயற்கை நீரூற்று அருகே செல்பி எடுத்து மகிழ்ந்தனர்
தொடர் விடுமுறை காரணமாக கோத்தகிரி நேரு பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் செயற்கை நீரூற்று அருகே நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
கோத்தகிரி
தொடர் விடுமுறை காரணமாக கோத்தகிரி நேரு பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் செயற்கை நீரூற்று அருகே நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
நேரு பூங்கா
கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் உள்ள நேரு பூங்கா முக்கியமான சுற்றுலாத்தலமாக அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் அழகிய புல் தரைகள் ரோஜா பூந்தோட்டம், வண்ண மலர்கள், சிறுவர் விளையாட்டு பூங்கா, நூற்றாண்டு பழமை வாய்ந்த பழங்குடியினர் கோத்தர் இன மக்களின் குல தெய்வமான அய்யனார் அம்மனோர் கோவில் ஆகியவை அமைந்துள்ளன. இந்தப் பூங்காவில் ஆண்டு தோறும் கோடை விழாவையொட்டி மே மாதத்தில் தோட்டக்கலை துறை சார்பில் 2 நாட்கள் காய்கறி கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.
காய்கறி கண்காட்சியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்த பூங்காவிற்கு வந்து செல்வது வழக்கம்.இது மட்டுமின்றி உள்ளூர் பொது மக்களின் முக்கிய பொழுது போக்கு அம்சமாக இந்த பூங்கா விளங்கி வருகிறது.
இந்தநிலையில் தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை, சனி, ஞாயிறு மற்றும் ஆயுத பூஜை அரசு விடுமுறை நாட்கள் என தொடர் விடுமுறையாக இருப்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கோத்தகிரியில் உள்ள கோடநாடு காட்சி முனை, கேத்தரின் நீர்வீழ்ச்சி, லாங் வுட் சோலை, நேரு பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை கண்டுகளிக்க கோத்தகிரி பகுதியில் குவிந்துள்ளனர். இதனால் கோத்தகிரி பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள் அனைத்தும் பதிவுசெய்யப்பட்டு, சுற்றுலாப் பயணிகளால் நிறைந்து காணப்படுகிறது.
போக்குவரத்து நெரிசல்
இதேபோல கோத்தகிரி நேரு பூங்காவில் உள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவில் நேற்று ஏராளமான குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர். பூங்காவில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீரூற்று சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது. அதை ஆர்வமுடன் கண்டுகளித்த சுற்றுலாப் பயணிகள் நீரூற்றின் அருகே நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
சுற்றுலாப் பயணிகளின் வருகையால் கோத்தகிரி நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்பட்டது. போக்குவரத்து போலீசார் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.