ஆபத்தை உணராமல் அத்துமீறும் சுற்றுலா பயணிகள்
குன்னூர் அருகே, லாஸ் நீர்வீழ்ச்சியில் ஆபத்தை உணராமல் அத்துமீறும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பொதுக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
குன்னூர் அருகே, லாஸ் நீர்வீழ்ச்சியில் ஆபத்தை உணராமல் அத்துமீறும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பொதுக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
லாஸ் நீர்வீழ்ச்சி
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையானது மலைகளை குடைந்து அமைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இந்த பாதையின் ஓரத்தில் உள்ள மலைகளில் ஏராளமான நீர்வீழ்ச்சிகள் காணப்படுகின்றன.
அந்த வகையில், குன்னூரில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதுதான், லாஸ் நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் சென்று ஆனந்த குளியல் போடுவது வழக்கம். ஆனால் அவர்கள் பாறைகள் மீது ஏறியும், ஆழமான பகுதிக்கு சென்றும் சாகசத்தில் ஈடுபடுவதால் உயிரிழப்பு ஏற்பட்டு வந்தது.
இதன் காரணமாக அந்த நீர்வீழ்ச்சிக்கு செல்ல கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறையினர் தடை விதித்து விட்டனர். ஆனாலும், சுற்றுலா பயணிகள் தடையை மீறி சென்று வருகின்றனர்.
பாறைகள் மீது ஏறி...
இந்த நிலையில் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக லாஸ் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் அதிகளவில் சென்று வருகின்றனர்.
அவர்கள் ஆபத்தை உணராமல் பாறைகள் மீது ஏறி நின்று செல்பி எடுப்பது, ஆழமான பகுதியில் இறங்கி குளிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.
தடுப்புகள்
இதுகுறித்து உள்ளூர் மக்கள் கூறும்போது, லாஸ் நீர்வீழ்ச்சி பகுதியில் உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளதால், வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். ஆனால் அதை மீறி சுற்றுலா பயணிகள் உள்ளே சென்று அத்துமீறுகின்றனர். அவர்களை போலீசார், வனத்துறையினர் தடுக்க வேண்டும். மேலும் நீர்வீழ்ச்சிக்கு செல்ல முடியாத வகையில் தடுப்புகள் அமைக்க வேண்டும். அதையும் மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.