லாரி மோதி டிராக்டர் டிரைவர் பலி


லாரி மோதி டிராக்டர் டிரைவர் பலி
x

பேரணாம்பட்டில் லாரி மோதி டிராக்டர் டிரைவர் பலியானார். வழக்கை மாற்றி பதிவு செய்ததாகக்கூறி உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதுடன், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

வேலூர்

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டில் லாரி மோதி டிராக்டர் டிரைவர் பலியானார். வழக்கை மாற்றி பதிவு செய்ததாகக்கூறி உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதுடன், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

லாரி மோதி பலி

பேரணாம்பட்டு டவுன் புதுஷாப் லைன் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 40), டிராக்டர் டிரைவர். இவர் கடந்த 6-ந் தேதி இரவு மோட்டார்சைக்கிளில் கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

அப்போது கர்நாடக மாநிலத்திலிருந்து சென்னையில் உள்ள ராணுவ கேன்டீனுக்கு மது பாட்டில்கள் ஏற்றி சென்ற லாரி தமிழரசன் ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் காயமடைந்த தமிழரசன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி அடுத்த நாள் இறந்துவிட்டார்.

விபத்து ஏற்படுத்திய லாரியை பொதுமக்கள் பிடித்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீஸ் நிலையம் முற்றுகை

இது குறித்து விசாரணை நடத்திய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஸ்ரீமதி, தமிழரசன் லாரி மோதி இறந்ததாக வழக்குப்பதிவு செய்யாமல், அவரே விபத்துக்குள்ளாகி இறந்ததாக வழக்குப் பதிவு செய்து லாரியை விடுவித்ததாக கூறப்படுகிறது.

இதனையறிந்த தமிழரசனின் மனைவி செந்தில்குமாரி மற்றும் அவரது உறவினர்கள் இன்று காலை 11 மணியளவில் பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஏன் லாரி மோதி தமிழரசன் இறந்ததாக வழக்குப்பதிவு செய்ய வில்லை என கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டனர்.

மேலும் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுப்பட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

அதற்கு புகார் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என போலீசார் தெரிவித்தனர்.

இதில் திருப்தியடையாத தமிழரசனின் உறவினர்கள் மீண்டும் பேரணாம்பட்டு டவுன் புத்துக்கோவில்- வீ.கோட்டா ரோடு சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது விசாரணை நடத்தி இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

இழப்பீடு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இன்ஸ்பெக்டர் உறுதியளித்தார்.

இதனைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.


Related Tags :
Next Story