கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் மோதிய டிராக்டர்:டிரைவருக்கு அபராதம்
தேனி கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் டிராக்டர் மோதியது. இதனால் டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தேனி,
தேனி புதிய பஸ் நிலைய திட்டச்சாலை வழியாக கலெக்டர் அலுவலகம் நோக்கி ஒரு டிராக்டர் நேற்று காலை வந்தது. கலெக்டர் அலுவலக பின்புற நுழைவு வாயில் வழியாக கார்களை தவிர சரக்கு வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி உயரமான வாகனங்கள் நுழைய முடியாத வகையில் நுழைவு வாயில் வளைவு உயரம் குறைவாக அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த டிராக்டரை ஓட்டி வந்த டிரைவர் நுழைவு வாயில் வழியாக நுழைந்தார்.
அப்போது டிராக்டரின் பின்னால் உள்ள தொட்டியில் அதிக பொருட்கள் ஏற்றுவதற்காக அமைக்கப்பட்டு இருந்த கம்பிகள் நுழைவு வாயிலில் பலமாக மோதியது. இதனால் நுழைவு வாயில் சேதம் அடைந்தது. அப்போது அந்த டிராக்டருக்கு பின்னால், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே காரில் வந்து கொண்டிருந்தார். இதையடுத்து அவர் டிராக்டரை நிறுத்தி விட்டு, தேனி போலீஸ் நிலையத்துக்கு தொடர்பு கொண்டு டிராக்டர் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து அந்த டிராக்டரை ஓட்டி வந்த ஆண்டிப்பட்டி பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த பெருமாள்ராஜாவுக்கு போக்குவரத்து விதி மீறலுக்காக தேனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தார்.