வியாபாரி விஷம் குடித்து தற்கொலை


வியாபாரி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 2 Dec 2022 6:45 PM GMT (Updated: 2 Dec 2022 6:47 PM GMT)

திருமணத்தில் விருப்பம் இல்லாததால், வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

மேலகிருஷ்ணன்புதூர்:

திருமணத்தில் விருப்பம் இல்லாததால், வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருமணத்தில் விருப்பம் இல்லை

சுசீந்திரம் அருகே வழுக்கம்பாறை மணவிளை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மனைவி தங்கலட்சுமி. இவர்களுடைய மகளுக்கு திருமணமாகி விட்டது. மகன் செல்வகுமார் (வயது 39) கன்னியாகுமரியில் சங்கு, பாசி வியாபாரம் செய்து வந்தார்.

செல்வகுமாருக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவருடைய நண்பர்கள் திருமணம் என்று கூறி வந்தாலே, ஏன் திருமணம் செய்து கொள்கிறீர்கள் என்று சத்தம் போட்டு வந்துள்ளார்.

விஷம் குடித்து தற்கொலை

இந்தநிலையில் செல்வகுமாருக்கு அவருடைய தாயார் பெண் பார்த்து பேசி முடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 30-ந்தேதி இரவு தாயாருடன் செல்வகுமார் தகராறு செய்து விட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு வீட்டுக்கு வரவில்லை.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சகாயபுரம் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் செல்வகுமார் பிணமாக கிடந்தார். இதை அந்த பகுதியில் இருப்பவர்கள் பார்த்து சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உடல் அருகில் காலியான விஷ பாட்டில்கள் 2 கிடந்தன.

இதுகுறித்து செல்வகுமாரின் தாய் தங்க லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story