வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்க கூட்டம்
நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.
நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங்க தலைவர் முகம்மது யூசுப் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நாராயணன், முகம்மது ஹனீபா, கான்முகம்மது, கவுரவ ஆலோசகர் சம்சுதீன், துணை செயலாளர்கள் செய்யதுஅலி, ஆதிமூலம், பொருளாளர் ஜவஹர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ரவிக்குமார் வரவேற்று பேசினார்.
நெல்லை மாநகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பழுதடைந்த சாலைகளை குறிப்பாக நயினார்குளம் சாலை மற்றும் தெருக்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். தென்காசி 4 வழிச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும். சந்திப்பு பஸ் நிலையத்தை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தால் அனைத்து வியாபாரிகளும், சிறுவணிகர்களும் நலிவடைந்து வருவதால் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் கண்ணன் நன்றி கூறினார்.