ஒரே நாளில் 40 டன் வரத்து: கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்க வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்தனர்


ஒரே நாளில் 40 டன் வரத்து: கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்க வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 15 Oct 2023 6:45 PM GMT (Updated: 15 Oct 2023 6:45 PM GMT)

கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்க வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்தனர்.

கடலூர்

கடலூர் முதுநகர்,

துறைமுகம்

கடலூர் துறைமுகத்தில் இருந்து சோனாங்குப்பம், சொத்திக்குப்பம், அக்கரைக்கோரி, தேவனாம்பட்டினம், தாழங்குடா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், விசை மற்றும் பைபர் படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்து, துறைமுகத்தில் விற்பனை செய்து வருகிறார்கள். குறிப்பாக வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் மீன் வாங்க பொதுமக்கள் குவிவதால் துறைமுகம் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால், பெருமாளை வழிபடும் மக்கள் அசைவத்தை தவிர்த்து, சனிக்கிழமை தோறும் விரதமிருந்து படையல் செய்து பெருமாளை வழிபட்டனர். இதனால் துறைமுகத்தில் கடந்த சில வாரங்களாக மீன்களின் விலை சற்று குறைந்து காணப்பட்டது.

ஒரே நாளில் 40 டன் மீன்வரத்து

நேற்று முன்தினம் 4-ம் சனிக்கிழமை முடிவடைந்ததால் விரதத்தை முடித்த மக்கள் ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலை முதலே கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்குவதற்காக திரண்டனர். பின்னர் அவர்கள் வஞ்சிரம், கானாங்கத்தை, சங்கரா, வவ்வால், பன்னி சாத்தான் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறுகையில், நேற்று ஒரே நாளில் 40 டன் அளவிற்கு மீன்களின் வரத்து இருந்தது. மீன்களின் வரத்து அதிகரித்து காணப்பட்டாலும் ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.700-க்கும், சங்கரா ரூ.300 முதல் ரூ.350 வரையும், வவ்வா ரூ.600-க்கும்், பன்னி சாத்தான் ரூ.350-க்கும், பாறை மீன் ரூ.250 முதல் 300 ரூபாய் வரையும், இறால் ரூ.200 முதல் ரூ.250 வரையும், நெத்திலி ரூ.200-க்கும் விற்பனையானது என்றார். புரட்டாசி மாதம் என்பதால் மீன்களின் விலை சற்று குறைந்து காணப்பட்டதாலும் பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் மீன்களை போட்டி போட்டு வாங்கிச் சென்றதை காணமுடிந்தது.


Next Story