வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டம்
ஆலங்குளத்தில் வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளத்தில் வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காமராஜா் சிலை
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பஸ் நிலையம் அருகில் காமராஜா் சிலை சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. தற்போது நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருவதால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த சிலையை அகற்ற முடிவு செய்தனர்.
அவ்வாறு அகற்றப்படும் சிலைக்கு பதிலாக புதிய வெண்கல சிலையை பஸ் நிலையம் அருகிலேயே அமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். எனினும் அதிகாரிகள் தரப்பில் சிலை நிறுவ போதிய இடம் ஒதுக்கீடு செய்து கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
கடையடைப்பு போராட்டம்
இந்த நிலையில் காமராஜர் சிலை அமைக்க இடத்தினை உறுதி செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆலங்குளம் நகர அனைத்து வியாபாரிகளும் நேற்று ஒரு நாள் அடையாள கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மருந்து கடைகளை தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தியேட்டர்களிலும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. ஆட்டோக்களும் ஓடவில்லை. இந்த போராட்டத்தில் வியாபாரிகள், பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார், தாசில்தார் ரவிந்தரன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, நெடுஞ்சாலை பணியின் போது அகற்றப்படும் காமராஜர் சிலைக்கு மாற்று இடமாக அம்பை சாலை பஸ் நிறுத்தம் கீழ்புறம் வேன் ஸ்டாண்ட் மைதானத்தில் உள்ள இடத்தை அளந்து உறுதி செய்யுமாறு கோரிக்கை வைத்தனர். அதுவரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
உடன்பாடு
இதையடுத்து தென்காசி உதவி கலெக்டர் கங்காதேவி மற்றும் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோர் பொதுமக்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, மழை பெய்தது. இதனால் கொட்டும் மழையிலும் வியாபாரிகள், பொதுமக்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.
பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதாவது வேன் ஸ்டாண்ட் மைதானத்தில் அதிகாரிகள் முன்னிலையில் வருவாய்த்துறையினர் இடத்தை அளவு செய்து எல்லைக்கல் நட்டு கொடுத்தனர். அதன் பின்னரே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து வழக்கம்போல் வியாபாரிகள் கடைகளை திறந்து வியாபாரம் செய்தனர்.