சந்தையில் குவிந்த வியாபாரிகள்; ஆடுகளை போட்டி போட்டு வாங்கி சென்றனர்


சந்தையில் குவிந்த வியாபாரிகள்; ஆடுகளை போட்டி போட்டு வாங்கி சென்றனர்
x

பக்ரீத், ஆடி மாத கொடை விழாவையொட்டி மேலப்பாளையம் சந்தையில் நேற்று வியாபாரிகள் குவிந்தனர். அவர்கள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

திருநெல்வேலி

பக்ரீத், ஆடி மாத கொடை விழாவையொட்டி மேலப்பாளையம் சந்தையில் நேற்று வியாபாரிகள் குவிந்தனர். அவர்கள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

கால்நடை சந்தை

நெல்லை மேலப்பாளையத்தில் மாநகராட்சி கால்நடை சந்தை வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதில் ஆடு, கோழி உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது. அப்போது, கோடிக்கணக்கான ரூபாய்க்கு வர்த்தகம் நடந்து வருகிறது.

அதேபோல் ரம்ஜான், பக்ரீத், தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் கூடுதலாக விற்பனை நடைபெறும்.

வியாபாரிகள் குவிந்தனர்

இந்த நிலையில் பக்ரீத் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்படுகிறது. மேலும் வருகிற ஆடி மாதம் நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் ஏராளமான கோவில் கொடை விழாக்கள் நடைபெறும்.

இதையொட்டி மேலப்பாளையம் சந்தையில் நேற்று ஆடுகளை விற்பனை செய்வதற்காக வியாபாரிகள், விவசாயிகள் குவிந்தனர். அவர்களிடம் அவற்றை வாங்க பொதுமக்கள், வியாபாரிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் சந்தை களைகட்டி காணப்பட்டது.

ரூ.35 ஆயிரத்துக்கு விற்ற ஆடு

நேற்று 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. எடை, தரத்துக்கு ஏற்ப அவை விற்பனை செய்யப்பட்டன. குறைந்தபட்சம் ரூ.7 ஆயிரத்தில் இருந்து ஆடுகள் விற்பனையானது. எட்டயபுரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட வெள்ளாடு ஒன்று அதிகபட்சமாக ரூ.35 ஆயிரத்துக்கு விலை போனது.

வியாபாரிகள் பலரும் போட்டி போட்டு மொத்தமாக ஆடுகளை வாங்கி சென்றனர். பொதுமக்களும் தங்களுக்கு தேவையான தரத்திலான ஆடுகளை வாங்கினர்.

முககவசம்

கால்நடை சந்தையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுமாறு மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தினர். அதன்பேரில் பொதுமக்களும், வியாபாரிகளும் முககவசம் அணிந்து சென்றனர்.


Next Story