உணவுப்பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.யை முழுமையாக அகற்ற வியாபாரிகள் கோரிக்கை


உணவுப்பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.யை முழுமையாக அகற்ற வியாபாரிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 13 July 2023 12:35 AM IST (Updated: 13 July 2023 6:03 PM IST)
t-max-icont-min-icon

உணவுப்பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.யை முழுமையாக அகற்ற வேண்டும் என கலந்துரையாடல் கூட்டத்தில் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

திருச்சி

கலந்துரையாடல் கூட்டம்

வணிக வரித்துறை அதிகாரிகள்-வியாபாரிகள் கலந்துரையாடல் கூட்டம் திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகே உள்ள ஓட்டலில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கூட்டத்துக்கு பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக வணிக வரித்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் பத்மாவதி, துணை ஆணையர் தங்கமணி ஆகியோர் கலந்து கொண்டு ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவைவரி) பற்றிய வியாபாரிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.

இந்தியாவில் 2017-ம் ஆண்டு ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்தபிறகு அதன் சட்டவிதிகளில் நூற்றுக்கணக்கான முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களுக்கு ஏற்ப, வணிகர்கள் தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ள உரிய காலஅவகாசம் வழங்க வேண்டும். மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக்குகளுக்கான தடையை நீக்கி தமிழகத்தில் உற்பத்திக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

ஜி.எஸ்.டி. வருவாய்

பிளாஸ்டிக் பூச்சு கொண்ட காகித கப்புகள் அண்டை மாநிலங்களில் இருந்து வரி ஏய்ப்பு செய்யப்பட்டு, தமிழகத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அரசுக்கு மாதம் ரூ.9 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு ஏற்படுகிறது. ஆகவே பிளாஸ்டிக் பூச்சு அல்லாத காகித கப்புகள் தயாரிப்பை தமிழக அரசு ஊக்குவித்து ஜி.எஸ்.டி. வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவுப்பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.யை முழுமையாக அகற்றிக்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுவை அதிகாரிகளிடம் வழங்கினார்கள்.

இந்த கூட்டத்தில் வணிகவரி அலுவலர் பாலசுப்பிரமணியன், பேரமைப்பு மண்டல தலைவர் தமிழ்செல்வம், மாவட்ட தலைவர் ஸ்ரீதர், மாநகர தலைவர் எஸ்.ஆர்.வி.கண்ணன் உள்பட பல்வேறு வியாபார சங்கங்களின் பிரதிநிதிகள், வியாபாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story