சாலையோரத்தில் தரைக்கடை அமைக்க இடம் பிடிக்கும் வியாபாரிகள்


சாலையோரத்தில் தரைக்கடை அமைக்க இடம் பிடிக்கும் வியாபாரிகள்
x

கும்பகோணத்தில் தீபாவளி பண்டிகைக்காக கும்பகோணத்தில், குளக்கரை மற்றும் சாலையோரத்தில் கட்டில்களை போட்டு வைத்து வியாபாரிகள் இடம் பிடித்துள்ளனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம்,

தீபாவளி பண்டிகை

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளின் ஒன்று தீபாவளி பண்டிகை. தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை, பட்டாசுகள் தான் முக்கிய இடம் பிடிக்கும். இதனால் தீபாவளிக்கு 1 மாதத்திற்கு முன்பே புத்தாடைகள் வாங்குவதற்காக கடைத்தெருக்களுக்கு மக்கள் செல்வார்கள். தீபாவளி பண்டிகை அடுத்த மாதம்(நவம்பர்) 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது.தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், வெளி மாவட்ட தரைக்கடை வியாபாரிகள் கும்பகோணத்தில் உள்ள பல இடங்களில் ஆடைகள் வியாபாரம் செய்ய இடத்தை பிடித்துள்ளனர்.

கும்பகோணத்தை மையமாக கொண்டு அரியலூர், ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, கடலூர், மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வந்து புத்தாடை வாங்குவார்கள்.தீபாவளிக்கு தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களை விட கும்பகோணத்தில் கூடுதலாக வர்த்தகம் நடைபெறும்.

இடம் பிடிக்கும் வியாபாரிகள்

வெளி மாவட்ட சில்லறை வியாபாரிகள் தோடு, ஜிமிக்கி, சேலைகள், வேட்டி, , சட்டைகள் மற்றும் பெண்களுக்கான அழகு சாதன பொருட்களை விற்பனை செய்வதற்காக கும்பகோணத்தில் உள்ள பொற்றாமரை குளம், மகாமக குளம், ஆயிகுளம் ரோடு, காந்தி பூங்கா, மடத்துத்தெரு, நாகேஸ்வரர் வடக்கு வீதி, கும்பேஸ்வரர் கோவில் தெற்கு வீதி, சோமேஸ்வரர் கோவில் தெற்கு வீதி, உச்சிபிள்ளையார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக கடைகள் அமைப்பது வழக்கம். தற்போது தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 20 நாட்களே உள்ளதால் தரைக்கடை வியாபாரிகள், சாலையோரத்தில் தரைக்கடை அமைக்க இடம் பிடித்து வருகின்றனர்.

இதற்காக அவர்கள் சாலையோரத்தில் கட்டில்கள், பெட்டிகள், கயிறுகளை கட்டி வைத்து இடம் பிடிக்கின்றனர். அதன் பின்னர் தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்பு இங்கு வந்து வியாபாரம் செய்வார்கள். இந்த வியாபாரிகள் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக கும்பகோணத்தில் வியாபாரம் செய்து வருகின்றனர்.


Next Story