பஸ் நிலையத்தை உடனே திறக்க வேண்டும்- மேயர் சரவணனிடம் வியாபாரிகள் மனு


பஸ் நிலையத்தை உடனே திறக்க வேண்டும்-  மேயர் சரவணனிடம் வியாபாரிகள் மனு
x

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை உடனே திறக்க வேண்டும் என்று மேயர் சரவணனிடம், வியாபாரிகள் மனு கொடுத்தனர்

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை உடனே திறக்க வேண்டும் என்று மேயர் சரவணனிடம், வியாபாரிகள் மனு கொடுத்தனர்.

குறைதீர்க்கும் நாள்

நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மேயர் சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாநகர பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

பாதாள சாக்கடை

பாளையங்கோட்டை அண்ணா நகரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியில் பாதாள சாக்கடை அமைப்பதற்காக முறையாக பணம் கட்டியுள்ளோம். ஆனாலும் பாதாள சாக்கடை அமைக்கப்படவில்லை. கடந்த ஒரு ஆண்டாக எங்கள் பகுதிக்கு முறையான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. எனவே பொதுமக்கள் நலன்கருதி உடனடியாக சீரான குடிநீர் வழங்க வேண்டும். பாதாள சாக்கடை பணிகளை விரைவில் தொடங்க வேண்டும், என்று கூறியுள்ளனர்.

நெல்லை டவுன் நயினார்குளம் நீர்பாசன சங்க உதவி செயலாளர் முருகன் தலைமையில் கொடுத்த மனுவில், டவுன் நயினார்குளத்தில் 9 பாசன மடைகள் உள்ளன. மடைகளை திறந்து அடைக்க முடியாமல் பென்சிங் வேலி போடப்பட்டு உள்ளது. அதனை அகற்றி மடைகள் இருக்கும் பகுதியில் கதவு அமைத்து தர வேண்டும். நயினார்குளத்திற்கு தண்ணீர் வரும் கால்வாயை தூர்வாரிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அருகில் இருக்கும் கடைக்காரர்கள் வாய்க்காலில் குப்பைகளை போடுகின்றனர். இதனால் கால்வாய் குப்பையாக காட்சி அளிக்கிறது. கால்வாய் செல்லும் இடங்களில் இருபுறமும்கம்பிகள் அமைத்து நயினார்குளத்தின் தூய்மையை பாதுகாக்க வேண்டும், என்று கூறியுள்ளனர்.

பஸ்நிலையம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நெல்லை மாநகர தலைவர் எம்.ஆர்.குணசேகரன், ராஜா பில்டிங் வியாபாரிகள் நலச்சங்க தலைவர் எர்னஸ்ட் பர்னாந்து, துணை செயலாளர் மகாவீர், பொருளாளர் சொக்கலிங்கம் ஆகியோர் தலைமையில் வியாபாரிகள் மேயர் பி.எம்.சரவணனிடம் மனு கொடுத்தனர்.

அதில் ''நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் கட்டுமான பணி தொடங்கி 4 ஆண்டுகள் ஆகிறது. சந்திப்பு பஸ் நிலையம் மற்றும் சுற்றுப்பகுதியில் 4 ஆண்டுகளாக வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது ஒரு பகுதி பஸ் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. பூமிக்கு அடியில் ஒரு தளத்தில் கார், மோட்டார் சைக்கிள் பார்க்கிங் வசதியும் அமைக்கப்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில் 17 பஸ்களை நிறுத்தி வைக்கவும், மற்ற பஸ்களை வரிசையாக வந்து செல்லும் வகையிலும் தற்போது வசதிகள் உள்ளன.

எனவே சந்திப்பு பஸ் நிலையத்தை தற்போது உள்ள நிலையில் உடனே திறந்து பயன்படுத்த வேண்டும். கோர்ட்டு வழக்கிற்கான பகுதியை தனியாக பிரித்து வைக்க வேண்டும். கூடுதல் பஸ்களை சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றிலும் உள்ள ரோட்டில் இயக்க வேண்டும். ஏற்கனவே அங்கு பயணிகள் நிழற்குடைகள் அமைக்கப்ப்பட்டு உள்ளது'' என்றனர்.


Next Story