வர்த்தகர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம்


வர்த்தகர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம்
x

வேளாங்கண்ணி அருகே பரவை காய்கறி சந்தையை பழைய இடத்துக்கு மாற்ற வலியுறுத்தி வர்த்தகர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

வேளாங்கண்ணி அருகே பரவை காய்கறி சந்தையை பழைய இடத்துக்கு மாற்ற வலியுறுத்தி வர்த்தகர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காய்கறி சந்தை

நாைக மாவட்டம் வேளாங்கண்ணி அருகே தெற்குபொய்கை நல்லூர் ஊராட்சியில் பரவை கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் 100 ஆண்டுகளாக காய்கறி சந்தை இயங்கி வந்தது.

வேளாங்கண்ணி, பிரதாபராமபுரம், காமேஸ்வரம், விழுந்தமாவடி, வேட்டைகாரனிருப்பு, வெள்ளப்பள்ளம், புதுப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் மாங்காய், தேங்காய், காய்கறிகள், பழங்கள், கீரைகள் உள்ளிட்டவைகளை சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர்.

ரூ.15 லட்சம் வருமானம்

இங்கு விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்கள், ஓட்டல்கள், மளிகை கடைகள், மீன்கடைகள் என 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதனால் இந்த சந்தையில் தினந்தோறும் பல லட்சம் ரூபாய் அளவில் வர்த்தகம் நடைபெற்று வந்தது.

இதன் மூலம் அறநிலையத்துறைக்கு ஆண்டுக்கு ரூ.15 லட்சம் வருமானம் கிடைத்து வந்தது. இதில் இருந்து தெற்கு பொய்கைநல்லூர் ஊராட்சிக்கு 15 சதவீதம் வரி செலுத்தி வந்தனர்.

இடமாற்றம்

கொரோனா தொற்று காரணமாக அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வந்த பரவை காய்கறி சந்தை தற்காலிகமாக அருகில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்துக்கு மாற்றப்பட்டது.

கொரோனா தொற்று குறைந்ததால் அரசு தளர்வுகள் அறிவித்தவுடன் தமிழகம் முழுவதும் சந்தைகள் பழைய இடத்திற்கு செயல்பட தொடங்கின. ஆனால் பரவை காய்கறி சந்தை மட்டும் இடமாற்றம் செய்யப்படவில்லை. பழைய இடத்திலேயே செயல்பட்டு வருகிறது.

கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம்

பழைய இடத்துக்கு சந்தையை மாற்றக்கோரி வியாபாரிகள் பலமுறை மாவட்ட நிர்வாகம், அறநிலையத்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தநிலையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான பழைய இடத்துக்கே மீண்டும் காய்கறி சந்தையை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி பரவை வர்த்தக நல சங்கம் சார்பில் நேற்று 50-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வர்த்தக சங்க தலைவர் ரமேஷ்குமார், செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினர். இதில் வர்த்தக சங்கத்தினர் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

எம்.எல்.ஏ. கார் முற்றுகை

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது அந்த வழியாக ஒரு நிகழ்ச்சிக்கு நாகை மாலி எம்.எல்.ஏ. காரில் சென்று கொண்டிருந்தார். இதை பார்த்த வர்த்தகர்கள், நாகை மாலி எம்.எல்.ஏ. சென்ற காரை வழிமறித்து முற்றுகையிட்டனர். இதை தொடர்ந்து எம்.எல்.ஏ., சந்தையை பார்வையிட்டு, மீண்டும் பழைய இடத்துக்கு சந்தையை மாற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். வர்த்தகர்கள், நாகை மாலி எம்.எல்.ஏ. காரை முற்றுகையிட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story