கன்னிகைப்பேரில் நடைபெற்ற தொடர் திருட்டு சம்பவத்தை கண்டித்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்


கன்னிகைப்பேரில் நடைபெற்ற தொடர் திருட்டு சம்பவத்தை கண்டித்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
x

கன்னிகைப்பேரில் நடைபெற்ற தொடர் திருட்டு சம்பவத்தை கண்டித்து வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர்

எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் பஜார் வீதியில் உள்ள கடைகளில் இரவு நேரங்களில் கொள்ளையர்கள் தொடர்ந்து திருடி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏகாம்பரம் என்பவரின் மளிகை கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் ரூ.50,000 ஆயிரத்தை கொள்ளையடித்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் பஜார் வீதியில் உள்ள ஒரு மருந்து கடையின் பூட்டை மர்ம நபர்கள் உடைக்கும் போது எதிர் வீட்டில் இருந்தவர் திருடன், திருடன் என்று கூக்குரல்லிட்டார். இதனால் மர்ம நபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெரியபாளையம் போலீஸ் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வினோத்குமார், முனிரத்தினம் சங்கர் மற்றும் போலீசார் நேற்று சம்பவ இடத்திற்கு வந்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், வியாபாரிகள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், இரவு நேரங்களில் போலீசார் கன்னிகைப்பேர் பஜார் வீதியில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சென்னை-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் கன்னிகைப்பேர் பஜனை கோவில் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். வியாபாரிகளின் கோரிக்கை மீது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இதையடுத்து வியாபாரிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story