தற்காலிக பூக்கடைகள் அமைத்த வியாபாரிகள்


தற்காலிக பூக்கடைகள் அமைத்த வியாபாரிகள்
x

தற்காலிக பூக்கடைகள் அமைத்த வியாபாரிகள்

தஞ்சாவூர்

சாலை விரிவாக்கம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்ததால் தஞ்சை பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் தற்காலிக பூக்கடைகளை வியாபாரிகள் அமைத்தனர். சிலர் பூக்காரத் தெருவிலேயே வியாபாரம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

பூச்சந்தை

தஞ்சை விளார்சாலையில் பூக்காரத்தெருவில் பூச்சந்தை உள்ளது. இங்கு 60 கடைகள் இருந்தன. இந்த மார்க்கெட்டுக்கு திண்டுக்கல், நிலக்கோட்டை, சேலம், ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். அதாவது தினமும் 1000 டன் பூக்கள் இந்த பூச்சந்தையில் விற்பனை செய்யப்படும்.

இங்கிருந்து வேளாங்கண்ணி, நாகை, வேதாரண்யம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, அரியலூர், திருமானூர், கந்தர்வக்கோட்டை, அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், திருவாரூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தஞ்சை பூச்சந்தையில் பண்டிகை காலங்களில் பூக்களின் விலை அதிகரிக்கும். மற்ற நாட்களில் பூக்கள் விலை குறைந்துவிடும்.

அப்புறப்படுத்த முடிவு

இந்த பூச்சந்தை குடிசையில் செயல்பட்டு வந்தது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வந்த இந்த பூச்சந்தைக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என பல ஆண்டுகளாக பூ வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் புதிய கட்டிடம் கட்டுதவற்கு எந்த முயற்சியும் எடுக்கப்படாததால் தொடர்ந்து குடிசையிலேயே பூச்சந்தை செயல்பட்டு வந்தது.

இந்தநிலையில் தஞ்சை விளார் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு சாலை விரிவாக்கம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பூச்சந்தையை அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி பூ வியாபாரிகளை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மற்றும் அதிகாரிகள் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பூச்சந்தையில் உள்ள கடைகளை காலி செய்ய வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தினர்.

தற்காலிக இடமாற்றம்

பல ஆண்டுகளாக இங்கே பூ வியாபாரம் செய்து வருகிறோம். திடீரென எங்களை காலி செய்ய சொன்னால் நாங்கள் எங்கே போவோம் என வியாபாரிகள் கூறினர். இதையடுத்து தஞ்சை பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தின் தரைப்பகுதியில் அதாவது வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தற்காலிகமாக பூ வியாபாரம் செய்து கொள்ளுங்கள். விரைவில் நிரந்தர இடம் ஒதுக்கி தருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வேறு வழியின்றி வியாபாரிகளும் சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து பூ வியாபாரிகளில் பலர் கடைகளை காலி செய்துவிட்டு மாநகராட்சி வணிக வளாகத்தில் நேற்றுமுதல் தற்காலிகமாக கடைகளை அமைத்து பூ வியாபாரம் செய்தனர். 45 வியாபாரிகள் நேற்று தங்களது வியாபாரத்தை தொடங்கினர். இன்னும் சில வியாபாரிகள் பூக்காரத் தெருவில் உள்ள பூச்சந்தையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் தங்களது வியாபாரத்தை தொடர்ந்தனர். இவர்கள் இதே இடத்திலேயே வியாபாரத்தை தொடர முடிவு செய்துள்ளனர். மாநகராட்சி வணிக வளாகத்திற்கு சென்ற வியாபாரிகள் என்ன செய்வது? என தெரியாமல் மாநகராட்சி அதிகாரிகளையும், அரசியல் கட்சியினரையும் நேற்றுஇரவு வரை சந்தித்து வந்தனர்.


Next Story