வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்


வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
x

சூழல் மண்டல பாதுகாப்பு திட்டத்தை திரும்ப பெற கோரி தேவர்சோலை, நெலாக்கோட்டையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சாலைகள் வெறிச்சோடின.

நீலகிரி

கூடலூர்,

சூழல் மண்டல பாதுகாப்பு திட்டத்தை திரும்ப பெற கோரி தேவர்சோலை, நெலாக்கோட்டையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சாலைகள் வெறிச்சோடின.

கடையடைப்பு போராட்டம்

நாடு முழுவதும் உள்ள தேசிய வன உயிரின காப்பகத்தின் எல்லையில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரம் நிரந்தர கட்டிடங்கள் கட்ட தடை விதிப்பது குறித்து மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த ஜூன் 3-ந் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் முதுமலை புலிகள் காப்பகத்தின் கரையோரம் உள்ள மசினகுடி, ஸ்ரீ மதுரை, நெலாக்கோட்டை ஆகிய ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இதனால் சூழல் மண்டல திட்டத்தால் மக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகிறது. எனவே, சூழல் மண்டல பாதுகாப்பு திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கூடலூர் அருகே தேவர்சோலை, நெலாக்கோட்டையில் வியாபாரிகள் சங்கத்தினர் நேற்று காலை முதல் மாலை 5 மணி வரை கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

மேல்முறையீடு செய்ய வேண்டும்

தொடர்ந்து தேவர்சோலை பஜாரில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். வியாபாரிகள் சங்க தலைவர் முகமது அய்யூப் தலைமை தாங்கினார். கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன் மற்றும் சையது முகமது (காங்கிரஸ்), அனிபா (முஸ்லிம் லீக்), நாசர் (கம்யூனிஸ்டு), சதீஷ் (பா.ஜ.க.), விவசாயிகள் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து சூழல் உணர்திறன் மண்டல திட்டத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் வாழ்வாதார பிரச்சினைகள் குறித்து விளக்கிப் பேசினர். முன்னதாக கடையடைப்பு போராட்டத்தால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதுகுறித்து வியாபாரிகள், பொதுமக்கள் கூறும்போது, இத்திட்டத்தால் பல ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். என்றனர்.


Next Story