கரூர் பஸ் நிலையத்தில் கடைகளை காலி செய்த வியாபாரிகள்


கரூர் பஸ் நிலையத்தில் கடைகளை காலி செய்த வியாபாரிகள்
x

சிமெண்டு பூச்சுகள் இடிந்து விழுந்த சம்பவம் எதிரொலியாக கரூர் பஸ் நிலையத்தில் கடைகளை வியாபாரிகள் காலி செய்தனர். மேலும் பொதுமக்களும், பயணிகளும் அந்தப்பகுதிக்குள் செல்ல முடியாதபடிஇரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டது.

கரூர்

காலி செய்த கடைகள்

கரூர் பஸ் நிலையத்தில் உள்ள தென்புறப் பகுதியில் கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள சிமெண்டு பூச்சுகள் கடந்த மாதம் 12-ந்தேதி கீழே இடிந்து விழுந்தது. மேலும் மேற்கூரை பெயர்ந்த இடத்தில் கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டிருந்தன. கரூர் பஸ் நிலையத்தின் தெற்கு பகுதியில் உள்ள கடைகளை இடித்து அகற்ற மாநகராட்சி முடிவு செய்திருந்தது. அந்த பகுதியில் உள்ள 25 கடைகளுக்கு மாநகராட்சி சார்பில் ஏற்கனவே நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து நேற்று அந்தப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் வியாபாரிகள் காலி செய்தனர். மேலும் கரூர் பஸ் நிலையத்தில் உள்ள தென்புறப் பகுதியில் கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள சிமெண்டு பூச்சுகள் கீழே இடிந்து விழுந்த இடத்தை சுற்றி பொதுமக்களும், பயணிகளும் உள்ளே செல்ல முடியாதபடி இரும்பு தடுப்புகளைக் கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டது.

முன்பதிவு மையத்தை மாற்ற கோரிக்கை

இதற்கிடையே, கரூர் பஸ்நிலையத்தின் தெற்குப் பகுதியில் மேற்படி மேற்கூரையில் உள்ள சிமெண்டு பூச்சுகள் கீழே இடிந்து விழுந்த இடத்தின் அருகில்தான் அரசு போக்குவரத்துக்கான முன்பதிவு மையம் செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் ஏராளமான பயணிகள் வெளியூர் செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்ய இந்தப் பகுதிக்குத்தான் வந்து செல்கின்றனர்.

தற்போது இந்தப்பகுதியில் சிமெண்டு பூச்சுகள் கீழே இடிந்ததால் அதனை சுற்றிலும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால் இங்கு டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக வருகின்ற பயணிகளும், பொதுமக்களும் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே மேற்படி முன்பதிவு மையத்தை வேறு இடத்திற்கு மாற்றி அதனை செயல்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story