போட்டிப்போட்டு பாம்பனில் மீன்களை வாங்கிய வியாபாரிகள்


போட்டிப்போட்டு பாம்பனில் மீன்களை வாங்கிய வியாபாரிகள்
x
தினத்தந்தி 16 Jun 2023 6:45 PM GMT (Updated: 16 Jun 2023 6:46 PM GMT)

தடைக்காலம் முடிந்து பாம்பன் மீனவர்கள் கடலுக்கு சென்ற நிலையில் நேற்று மீன்களுடன் கரை திரும்பினர். மீன்களை வியாபாரிகள் ேபாட்டிப்போட்டு வாங்கினர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

தடைக்காலம் முடிந்து பாம்பன் மீனவர்கள் கடலுக்கு சென்ற நிலையில் நேற்று மீன்களுடன் கரை திரும்பினர். மீன்களை வியாபாரிகள் ேபாட்டிப்போட்டு வாங்கினர்.

மீன்பிடி தடைக்காலம்

ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரையிலும் மீன்கள் இனப்பெருக்க கால சீசனாக கருதப்படுவதால் தமிழகத்தில், அந்த 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல அரசால் தடை விதிக்கப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டும் 2 மாத காலம் தடை விதிக்கப்பட்டு இருந்தது. தடைக்காலம் முடிந்ததை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து 80-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 500-க்கும் அதிகமான மீனவர்கள் தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இதேபோல் மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, மூக்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் விசைப்படகு மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் அனைவரும் நேற்று காலை மாவுலா, விளை, முண்டக்கண்ணி, பாறை, மஞ்சக்கிளி, திருக்கை உள்பட விதவிதமான மீன்களுடன் நேற்று கரை திரும்பினார்கள். வியாபாரிகள் ஏராளமானோர் வந்திருந்து போட்டிப்போட்டு மீன்களை வாங்கினர். இதனால் கடந்த 2 மாதமாக வெறிச்சோடி காணப்பட்ட தெற்குவாடி துறைமுக கடற்கரை பகுதி நேற்று மீனவர்கள், வியாபாரிகளால் களை கட்டி காணப்பட்டது.

தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க சென்றிருந்த நிலையில், எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்கவில்லை எனவும் மீனவர்கள் தெரிவித்தனர். இது குறித்து பாம்பன் விசைப்படகு மீனவர் பிரசன்னா கூறும்போது, "தடைக்கால சீசன் முடிந்து மீன் பிடிக்க சென்றநிலையில் எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்கவில்லை. ஒவ்வொரு படகிலும் சராசரியாக 500 கிலோ முதல் அதிகபட்சம் ஒரு சில படகுகளில் ஒன்றரை டன் வரையே மீன்கள் வந்துள்ளன, என்று கூறினார்.

விலை விவரம்

நேற்று பாம்பனில் மீன்கள் விலை வருமாறு:-

மாவுலா 1 கிலோ-ரூ.480. விளை-ரூ.440, கிளாத்தி -ரூ.280, பாறை-ரூ.470, முண்டக்கண்ணி பாறை-ரூ.170, மஞ்சக்கிளி -ரூ.140-க்குவிலை போனதாக மீனவர்கள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story