பாரம்பரிய நாட்டு இன நாய்கள் சங்கம விழா
தேனி புத்தகத் திருவிழாவில் பாரம்பரிய நாட்டு இன நாய்கள் சங்கம விழா நடந்தது.
தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முதல் புத்தகத் திருவிழா பழனிசெட்டிபட்டியில் கடந்த 3-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. 8-வது நாளான நேற்று பாரம்பரிய நாட்டு இன நாய்களின் சங்கம விழா நடந்தது. இதில் கோம்பை, சிப்பிப்பாறை, ராஜபாளையம் போன்ற பாரம்பரிய நாட்டு இன நாய்களை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்திருந்தனர். 20-க்கும் மேற்பட்ட நாய்கள் இதில் பங்கேற்றன. அவை அணிவகுத்து நிறுத்தப்பட்டன. அவற்றை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். நாய்களின் உரிமையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னர், போலீஸ் துறையில் பயிற்சி அளிக்கப்பட்ட மோப்பநாய்களின் சாகச நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் மோப்ப நாய்கள் வெற்றி, வீரா, பைரவ், லக்கி ஆகியவை பங்கேற்று சாகசங்கள் நிகழ்த்தின. அதைத்தொடர்ந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சிக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வக்குமார் வரவேற்றார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமை தாங்கி பேசினார். விழாவில், சாலை பாதுகாப்பு பொன்மொழி எழுதும் போட்டிகள் மற்றும் சாலை பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக கவிஞர் கவிக்கருப்பையா நடுவராக பங்கேற்ற சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.