ஒட்டன்சத்திரம் அருகே பாரம்பரிய கால்நடை, குதிரை கண்காட்சி
ஒட்டன்சத்திரம் அருகே அத்திக்கோம்பையில் பாரம்பரிய கால்நடை, குதிரை கண்காட்சி நடைபெற்று வருகிறது. வியாபாரிகள் வராததால் இந்த கண்காட்சி களையிழந்து காணப்படுகிறது.
ஒட்டன்சத்திரம் அருகே அத்திக்கோம்பையில் பாரம்பரிய கால்நடை, குதிரை கண்காட்சி நடைபெற்று வருகிறது. வியாபாரிகள் வராததால் இந்த கண்காட்சி களையிழந்து காணப்படுகிறது.
பாரம்பரிய கண்காட்சி
ஒட்டன்சத்திரம் அருகே அத்திக்கோம்பையில் பிரசித்திபெற்ற உச்சிகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவையொட்டி அத்திக்கோம்பையில் கால்நடை, குதிரை கண்காட்சி ஒருவாரம் நடைபெறுவது வழக்கம். 100 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரிய முறைப்படி நடைபெறும் இந்த கண்காட்சியில் மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தங்களுடைய கால்நடைகள் மற்றும் குதிரைகளை விற்பனைக்காக கொண்டு வருவார்கள். அதேபோல் மாடு, குதிரைகளை கட்டுவதற்கான தேவையான கயிறுகள் மற்றும் மணிகளும் விற்பனை செய்யப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அத்திக்கோம்பையில் கால்நடை கண்காட்சி நடைபெறவில்லை.
500 மாடுகள்
இந்தநிலையில் இந்த ஆண்டு கால்நடை, குதிரை கண்காட்சி நடத்த விழாக்குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி, இந்த ஆண்டிற்கான கால்நடை, குதிரை கண்காட்சி கடந்த 21-ந்தேதி தொடங்கி, நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கண்காட்சியில் 2,000-க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். ஆனால் இந்த ஆண்டு 500-க்கும் குறைவான மாடுகளே விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் வியாபாரிகள், விவசாயிகள் இந்த ஆண்டு அதிக அளவில் வராததால் கண்காட்சி களையிழந்து காணப்படுகிறது. மேலும் கண்காட்சிக்கு வரும் கால்நடைகளின் விலையும் வெகுவாக குறைந்தது. இதேபோல் கால்நடைகளுக்கு தேவையான கயிறு, மணிகள் விற்பனையும் குறைந்தது.
விலை குறைந்தது
இதுகுறித்து கண்காட்சிக்கு வந்த வியாபாரி ஒருவர் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கண்காட்சியில் ரூ.2 லட்சத்துக்கு விற்பனையான காளை மாடுகள் தற்போது ரூ.1 லட்சத்துக்கும், ரூ.6 லட்சத்துக்கு விலை போன குதிரைகள் தற்போது ரூ.2 லட்சம் முதல் 3 லட்சம் வரையில் விற்பனையாகிறது. அதேபோல நாட்டு மாடுகள் ரூ.80 ஆயிரம் வரை விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது விலை குறைந்து ரூ.60 ஆயிரத்துக்கு மட்டுமே வியாபாரிகளால் வாங்கப்படுகிறது. இதுதவிர கன்று குட்டிகள் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையாகும். தற்போது அவற்றின் விலையும் குறைந்து ரூ.15 ஆயிரத்துக்கு விற்பனையாகின்றன. விவசாயிகள், வியாபாரிகள் வரத்து குறைந்ததால் கால்நடைகள் மற்றும் குதிரைகளின் விலை வெகுவாக குறைந்துவிட்டது என்றார்.
இந்த கண்காட்சி வருகிற 27-ந்தேதி வரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.