இலங்கை தமிழர் பாரம்பரிய ஓலைப்புட்டு உணவகத்துக்குபொதுமக்கள் ஆதரவு தரவேண்டும்:கனிமொழி எம்.பி வேண்டுகோள்


இலங்கை தமிழர் பாரம்பரிய ஓலைப்புட்டு உணவகத்துக்குபொதுமக்கள் ஆதரவு தரவேண்டும்:கனிமொழி எம்.பி வேண்டுகோள்
x
தினத்தந்தி 27 Oct 2023 12:15 AM IST (Updated: 27 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியிலுள்ள இலங்கை தமிழர் பாரம்பரிய ஓலைப்புட்டு உணவகத்துக்கு பொதுமக்கள் ஆதரவு தரவேண்டும் என்று கனிமொழி எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தூத்துக்குடி

இலங்கை தமிழர் பாரம்பரிய ஓலைப்புட்டு உணவகத்துக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆண்டு விழா

தூத்துக்குடியில் இலங்கை தமிழர்கள் சார்பில் ஓலைப்புட்டு விற்பனை உணவகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த உணவகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கோ.லட்சுமிபதி தலைமை தாங்கினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.

ஆதரவு

அப்போது, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வாழும் தமிழர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ச்சியாக அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதன்படி நிரந்தர வீடுகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஓலைப்புட்டு இலங்கைத் தமிழர் பாரம்பரிய உணவகம் ஒரு ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்து 2-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. எத்தனையோ போராட்டங்கள், கஷ்டங்களை தாண்டி வெற்றிகரமாக நடத்தி வருபவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மாவடட கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் ஓலைப்புட்டு இலங்கைத் தமிழர் பாரம்பரிய உணவை வாங்கி, அவர்கள் வாழ்வாதாரம் மேம்பட உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். தொழில் அதிபர்கள், பொதுமக்களும் ஓலைப்புட்டு வாங்கி பரிமாற வேண்டும். இதனால் அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும். இதனால் அவர்கள் தமிழகம் முழுவதும் முன்னோடியாக திகழ்வார்கள். உங்கள் அனைவரின் ஆதரவையும், அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறினார்.

அமைச்சர் கீதாஜீவன்

விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசும் போது, இலங்கை தமிழர்கள் பயன்பெறும் வகையில் காங்கிரீட் வீடுகள், சாலைவசதி, குடிநீர் வசதி, அவர்களின் குழந்தைகளின் கல்வி செலவு ஏற்பு, தொழிற்கல்விக்கான உதவித்தொகை உயர்வு, விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு போன்ற பல திட்டங்களை தமிழக முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார். இலங்கை தமிழர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக கனிமொழி எம்.பி, எங்கெல்லாம் நிகழ்ச்சி நடக்கிறதோ அங்கு அவர்களுக்கு வாய்ப்பு அளித்ததுடன் இங்கு ஒரு நிரந்தரமான கடையையும் அமைத்து கொடுத்து உள்ளார். உங்களது சாதனைகளுக்கான பெருமையெல்லாம் கனிமொழி எம்.பி.யையே சேரும். நீங்கள் மென்மேலும் வளர்ச்சிஅடைய வேண்டும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார், ஐக்கியநாடுகள் சபையின் அகதிகள் அமைப்பு வளன், மாநகராட்சி துணை மேயர் செ.ஜெனிட்டா மற்றும் அலுவலர்கள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story