மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு


மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 4 July 2023 3:45 AM IST (Updated: 4 July 2023 3:45 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் கனமழை பெய்தது. இதனால் சோலையாறு அணை சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் கனமழை பெய்தது. இதனால் சோலையாறு அணை சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கனமழை

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. மழை தீவிரம் அடையாமல், விட்டு, விட்டு பெய்து வந்தது. இந்தநிலையில் தமிழகத்தில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கோவை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

இதைத்தொடர்ந்து வால்பாறை பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை தொடர்ந்து பரவலாக பெய்தது. நேற்று மதியம் 2 மணிக்கு பின்னர் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மழையில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்த படி சென்றனர். பஸ் நிலையத்திற்கு வந்த பயணிகள் மழைக்கு ஆங்காங்கே ஒதுங்கி நின்றார்கள்.

போக்குவரத்து பாதிப்பு

கனமழை காரணமாக வால்பாறை-சோலையாறு அணை சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்தது. இதனால் அரசு பஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து எஸ்டேட் தொழிலாளர்கள் மரத்தை வெட்டி அகற்றினர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது. கனமழையால் வால்பாறையில் இதமான காலநிலை நிலவியது.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி வால்பாறையில் 37 மி.மீ, மேல்நீராறில் 59 மி.மீ., கீழ் நீராறில் 15 மி.மீ., சோலையாறு அணையில் 22 மி.மீ. மழை பெய்து உள்ளது. சோலையாறு அணையின் நீர்மட்டம் 21 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 252 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.


Next Story