மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
குன்னூரில் பலத்த மழை பெய்தது. இதனால் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குன்னூர்
குன்னூரில் பலத்த மழை பெய்தது. இதனால் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மரங்கள் விழுந்தன
குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் மழை பெய்வதால், ஆங்காங்கே சாலைகளில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு குன்னூர்-கோத்தகிரி சாலை அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகில் மரம் விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் நள்ளிரவில் அதே பகுதியில் மீண்டும் ஒரு மரம் விழுந்தது. தகவல் அறிந்த குன்னூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மின் வாள் மூலம் மரத்தை வெட்டி அகற்றினர். சுமார் ½ மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது.
போக்குவரத்து பாதிப்பு
இந்தநிலையில் நேற்று குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் காலை 11 மணியளவில் குன்னூர் சப்ளை டிப்போ சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே மரம் முறிந்து விழுந்தது. அப்பகுதியில் மின் கம்பிகள் சென்றதால், மரம் சாலையில் விழாமல் மின் கம்பிகள் மீது விழுந்து சாலையில் தொங்கியபடி கிடந்தது.
இதனால் அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மின்சாரத்தை துண்டித்தனர். அதன் பின்னர் தீயணைப்பு வீரர்கள் மரத்தை வெட்டி அகற்றினர். தொடர்ந்து அரசு பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்றன.
தொடர் மழையால் குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. இதனால் பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது. அங்கு படகு சவாரி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் காட்டேரி பூங்கா, லேம்ஸ்ராக், டால்பின் நோய் போன்ற சுற்றுலா தலங்களும் வெறிச்சோடின.