மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
குன்னூரில் தொடர் மழை காரணமாக மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் 2 வீடுகள் இடிந்தன.
குன்னூர்,
குன்னூரில் தொடர் மழை காரணமாக மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் 2 வீடுகள் இடிந்தன.
மரம் விழுந்தது
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக ஊட்டி, குன்னூர், மஞ்சூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குன்னூர் ஆர்செடின் பகுதியில் ராட்சத மரம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமையில் வீரர்கள் சென்று, கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் மரத்தை வெட்டி அகற்றினர். 2 மணி நேரத்துக்கு பின்னர் போக்குவரத்து சீரானது. குன்னூர் சந்திரா காலனியில் இருந்து கீழ் கரோலினா குடியிருப்புக்கு செல்லும் நடைபாதை பெயர்ந்து சேதமடைந்தது. இந்திரா நகரில் சந்திரா என்பவரது வீடு இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அந்த வீட்டை வருவாய்த்துறையினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
குன்னூர் அருகே காட்டேரி-உலிக்கல் சாலையில் நான்சச் பகுதியில் நள்ளிரவில் மரம் முறிந்து விழுந்தது. சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, மின்வாள் எந்திரம் மூலம் மரத்தை துண்டு, துண்டாக வெட்டி அகற்றினர். மேலும் அப்பகுதியில் சாலையோரம் ஆபத்தான நிலையில் இருந்த சில மரங்களையும் வெட்டி அப்புறப்படுத்தினர்.
இதேபோல் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. கோத்தகிரி அருகே தேனாடு ஓம்நகரில் சிதம்பரம் என்பவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதமடைந்தது. வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர்.
கடும் பனிமூட்டம்
தொடர் மழையால் ஆங்காங்கே சாலையோரம் லேசான மண்சரிவு ஏற்பட்டு இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கவனமுடன் வாகனங்களை இயக்கினர்.
மேலும் குன்னூர் முதல் பர்லியார் வரை கடும் பனிமூட்டம் நிலவுவதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கின்றனர். நேற்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் ஊட்டி மற்றும் கல்லட்டியில் 9 மில்லி மீட்டர், குன்னூரில் 18 மி.மீ., கெத்தையில் 27 மி.மீ., கிண்ணக்கொரையில் 36 மி.மீ., பர்லியாரில் 48 மி.மீ. மழை பதிவானது.