மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
பொள்ளாச்சியில் பலத்த மழை காரணமாக மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் பள்ளி, அங்கன்வாடி மையத்துக்குள் தண்ணீர் ஒழுகியது.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சியில் பலத்த மழை காரணமாக மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் பள்ளி, அங்கன்வாடி மையத்துக்குள் தண்ணீர் ஒழுகியது.
வகுப்பறைக்குள் ஒழுகிய மழைநீர்
பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை முதல் விடாமல் மழை பெய்தது. இதன் காரணமாக நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் மேல் தளத்தில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் வகுப்பறைகளுக்குள் மழைநீர் ஒழுகியதால், அங்கிருந்த மாணவர்களை வேறு கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்தனர். மேலும் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி நின்றதால் மாணவர்கள் கடும் அவதிப்பட்டனர்.
உடுமலை ரோட்டில் உள்ள சிக்கஞ்செட்டியார் வீதியில் உள்ள அங்கன்வாடி மைய வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால் குழந்தைகள் மையத்தை விட்டு வெளியே வருவதற்கு சிரமப்பட்டனர். பின்னர் அங்கன்வாடி ஊழியர்கள் மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மேற்கூரை பழுது காரணமாக மழைநீர் அங்கன்வாடி மையத்திற்குள் ஒழுகியது.
மரம் விழுந்தது
பொள்ளாச்சி-வால்பாறை ரோட்டில் வேடசந்தூரில் மழைக்கு இடையே வீசிய பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த வழியாக வந்த கார் சேதமடைந்தது. மேலும் மரம் மின்கம்பம் மீது விழுந்ததில், மின்சார ஓயர்கள் சாலையில் விழுந்து கிடந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைத்தனர்.
அதிர்ஷ்டவசமாக மின் கம்பம் சாய்ந்த போது யாரும் வராததால் பெரும் உயிர்சேதம் ஏற்பட்டது. மேலும் ரோட்டில் விழுந்த மரத்தை நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டி அகற்றினர். இதன் காரணமாக வால்பாறை ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கடந்த ஒரு வாரமாக குரங்கு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக பி.ஏ.பி. திட்ட அணைகள், தொகுப்பு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு 3,075 கன அடியும், ஆழியாறு அணைக்கு வினாடிக்கு 773 கன அடியும் நீர்வந்து கொண்டிருக்கிறது.
ஆனைமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் காளியாபுரம்-பொன்னாலம்மன் துரை சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்தது. இதனால் எட்டித்துறை, பொன்னாலம்மன் துரை, காளியாபுரம், நரிக்கல்பதி போன்ற பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து எந்திரம் மூலம் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு பின்னர் போக்குவரத்து சீரானது.
மழை அளவு
பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- சோலையாறு-92, பரம்பிக்குளம்-35, ஆழியாறு-10.6, திருமூர்த்தி-8, அமராவதி-2, வால்பாறை-77, மேல்நீராறு-142, கீழ்நீராறு-78, காடம்பாறை-19, சர்க்கார்பதி-17.2, வேட்டைக்காரன்புதூர்-22.6, மணக்கடவு-44, தூணக்கடவு-22, பெருவாரிபள்ளம்-38, அப்பர் ஆழியாறு-18, நவமலை-9, பொள்ளாச்சி-61.4, நல்லாறு-8, நெகமம் 49.