சாலை சீரமைப்பு பணியால் போக்குவரத்து மாற்றம்


சாலை சீரமைப்பு பணியால் போக்குவரத்து மாற்றம்
x

நெல்லையில் சாலை சீரமைப்பு பணியால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லையில் சாலை சீரமைப்பு பணியால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

எஸ்.என்.ஹைரோடு

நெல்லை மாநகரில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்துக்காக சாலைகளின் நடுவே குழி தோண்டி குழாய்கள் பதிக்கப்பட்டன. அங்கு ரோடுகள் போடப்படாமல் மோசமான நிலையில் உள்ளன. இதில் டவுன் ஆர்ச் முதல் ஸ்ரீபுரம் ஈரடுக்கு மேம்பாலம் வரை எஸ்.என்.ஹைரோடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனை நெடுஞ்சாலைத்துறை சீரமைக்க நடவடிக்கை எடுத்து உள்ளது.

இதற்காக சாலையின் இருபுறமும் உள்ள சாக்கடை கால்வாய்கள் உடைக்கப்பட்டு புதிதாக போடும் பணி நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் சாலையை விரிவாக்கம் செய்து, புதிதாக அமைக்கும் பணி நேற்று தொடங்கியது.

போக்குவரத்து மாற்றம்

இதற்காக ஒரு வழிப்பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. அந்த பாதையில் உள்ள பள்ளம் தோண்டி ஜல்லி கற்கள் கொட்டி பலப்படுத்தப்பட உள்ளது. இந்த பணி நேற்று 10-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள், லாரிகள் மூலம் ஒரே நேரத்தில் மும்முரமாக நடைபெற்றது. இதனால் நெல்லை சந்திப்பில் இருந்து ஆர்ச் நோக்கி சென்ற வாகனங்கள் மட்டும் ஒரு பகுதி வழியாக செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. ஆர்ச்சில் இருந்து சந்திப்பு நோக்கி வரும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. டவுன் பஸ்கள் டவுன் தொண்டர் சன்னதியில் இருந்து பாறையடி, தச்சநல்லூர் வழியாக திருப்பி விடப்பட்டன. தென்காசியில் இருந்து வந்த பஸ்கள் பழையபேட்டை, தச்சநல்லூர் வழியாக திருப்பி விடப்பட்டது. இதனால் சந்திப்பு பகுதிக்கு வரவேண்டிய பயணிகள் உடையார்பட்டி, வண்ணார்பேட்டை போன்ற இடங்களில் இறங்கி மாற்று பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள் மூலம் வந்தனர்.

விரைவாக முடிக்க வேண்டும்

இந்த சாலை மேம்பாட்டு பணியை விரைவாக முடித்து போக்குவரத்து சீராக இயங்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story