போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் சுங்கச்சாவடி
கிருஷ்ணகிரி நகரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் சுங்கச்சாவடிக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கிறார்கள்.
கிருஷ்ணகிரி நகரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் சுங்கச்சாவடிக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கிறார்கள்.
சுங்கச்சாவடி
தமிழ்நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மொத்தம் 42 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. இதில் தமிழ்நாடு-கர்நாடகா ஆகியவற்றை இணைக்க கூடிய கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி நகருக்கு அருகில் சுங்கச்சாவடி உள்ளது. தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சுங்கச்சாவடியை கடந்து பெங்களூரு மற்றும் வடமாநிலங்களுக்கு செல்கின்றன.
அதே போல பெங்களூரு, ஓசூர் மற்றும் வடமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான வாகனங்கள் இந்த சுங்கச்சாவடியை கடந்து கிருஷ்ணகிரி மற்றும் பல்வேறு நகரங்களுக்கு செல்கின்றன. இந்த சுங்கச்சாவடி கிருஷ்ணகிரி நகராட்சி எல்லை முடிவில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ளது. இதில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் மாவட்ட கலெக்டர் அலுவலகமும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகமும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகமும் அமைந்துள்ளன.
விவசாய பொருட்கள்
கிருஷ்ணகிரியில் இருந்து நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் இந்த அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் சுங்கச்சாவடியை கடந்து தான் செல்ல வேண்டும். இதில் பலரும் நாள்தோறும் வாகனங்களில் சென்று வருவதால் நாள் ஒன்றுக்கு பலமுறை சுங்க கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மேலும், கிருஷ்ணகிரி நகரை சுற்றி பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் பல்வேறு விவசாய பொருட்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்த கிராமங்களில் சாகுபடி செய்யப்படும் விவசாய விளை பொருட்களை கிருஷ்ணகிரி சந்தைகளுக்கு கொண்டு வர சுங்க கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் நிலவுகிறது. கிருஷ்ணகிரி நகரின் அருகாமையில் உள்ள கிராமத்தில் இருந்து கொண்டு வரப்படும் விவசாய பொருட்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் கூட சுங்கச்சாலையைப் பயன்படுத்தாத நிலையில் சுங்க கட்டணம் கட்ட வேண்டும் என கூறுவதை ஏற்க முடியாது என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
போக்குவரத்து நெரிசல்
தமிழகத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் பெங்களூரு பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் சனி, ஞாயிறு உள்ளிட்ட வார விடுமுறை நாட்களிலும், தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகை நாட்களிலும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதனால் பலரும் கார்களில் தங்களின் சொந்த ஊர்களுக்கு வருவதால் வாரந்தோறும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், பண்டிகை நாட்களிலும் சுங்கச்சாவடியில் கூட்டம் நிரம்பி வழிகிறது. போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவசரத்திற்காக கூட தேசிய நெடுஞ்சாலையில் செல்ல முடியாத நிலை உள்ளது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் கூட அந்த நெடுஞ்சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
இடமாற்றம் செய்யப்படுமா?
கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் அனைத்து தேவைகளுக்கும் தலைமை அலுவலகமாக செயல்படும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ள இடத்துக்கும் நகரில் உள்ள பஸ் நிலையத்துக்கும் இடையே இருக்கும் ஒரு கிலோ மீட்டர் தூரம் செல்ல சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என்பது வேதனைக்குரிய விஷயமாக உள்ளது. இந்த சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் போராட்டங்கள் நடத்தியும், எந்த தீர்வும் எட்டப்படவில்லை.
அதேபோல தேர்தலின் போது அரசியல் கட்சியினரும் சுங்கச்சாவடியை இட மாற்றம் செய்வதாக வாக்குறுதிகளாக கூறி வருகிறார்கள். இதனால் தற்போது இயங்கி வரும் சுங்கச்சாவடியை குருபரப்பள்ளியை தாண்டி சின்னாறு அருகில் இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.