மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
கூடலூர் பகுதியில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பலத்த மழை
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. ஆனால் கூடலூர் பகுதியில் போதிய மழை பெய்யவில்லை. இருப்பினும், வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காலநிலை நிலவி வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில் பெய்ய மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விடிய, விடிய பலத்த மழையாக பெய்தது.
இதனால் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மேலும் சாலைகளில் வெள்ளம்போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று காலை 8.30 மணி அளவில் கூடலூர் அருகே குற்றிமுற்றியில் இருந்து மச்சிக்கொல்லி செல்லும் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மின் இணைப்பு துண்டிப்பு
அப்பகுதியில் மரம் மின்கம்பிகள் மீதும் விழுந்ததால், மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இதன் காரணமாக சுற்றுவட்டார கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதை அறிந்த பொதுமக்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் முறிந்து கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.
பின்னர் மின்வாரிய ஊழியர்கள் அறுந்து கிடந்த மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து காலை 11 மணிக்கு மின்வினியோகம் செய்யப்பட்டது. இதேபோல் கூடலூர்-ஓவேலி சாலையில் உள்ள கெவிப்பாரா பகுதியில் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. இதனால் கூடலூர், ஓவேலியில் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் மின் ஊழியர்கள் விரைந்து வந்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். தொடர்ந்து மின் வினியோகம் சீரானது.