பழனிசெட்டியூர்-கோமாளிபட்டி சாலையில் போக்குவரத்து பாதிப்பு


பழனிசெட்டியூர்-கோமாளிபட்டி சாலையில் போக்குவரத்து பாதிப்பு
x

புங்காற்றில் கரைபுரண்டு ஓடிய மழைநீரால் பழனிசெட்டியூர்- கோமாளிபட்டி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்ல முடியாததால் மாணவர்கள் கடும் அவதி அடைந்தனர்.

கரூர்

புங்காறு

கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், பண்ணப்பட்டி ஊராட்சி பழனிசெட்டியூர்-கோமாளிப்பட்டி இடையே புங்காறு ஓடுகிறது. இந்த ஆற்றின் வழியாக விராலிபட்டி, வரவணை, தரகம்பட்டி, மைலம்பட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில் அதிக அளவு மழை பெய்யும்போது, காடுகளில் வழிந்தோடும் மழை நீரும், அப்பகுதியில் உள்ள சிறு குளங்கள், குட்டைகளில் நீர் நிரம்பி வழிந்து வெளியேறும் நீரும் அதிக அளவில் ஒன்றுசேர்ந்து ஓடி பஞ்சப்பட்டி ஏரிக்கு நீர் செல்கிறது.

கரூர்-மணப்பாறை மாநில நெடுஞ்சாலையில் மஞ்சநாயக்கன்பட்டியில் பிரிந்து பிச்சம்பட்டி, ரெங்காபாளையம், முத்துரெங்கம்பட்டி, பழனிசெட்டியூர், கோமாளிபட்டி வழியாக உடையாபட்டி, பஞ்சப்பட்டி, அய்யர்மலை மற்றும் சுற்றுப்பகுதி ஊர்களுக்கு செல்லும் சாலை, பழனிசெட்டியூர்-கோமாளிபட்டி இடையே புங்காற்றின் குறுக்கே செல்கிது.

காட்டாற்று வெள்ளம்

இந்த சாலையின் வழியாக தினந்தோறும் பள்ளி, கல்லூரி, அரசு, தனியார் பஸ்கள் மற்றும் கரூரில் இயங்கும் தொழில் நிறுவனங்களுக்கு ஆட்களை ஏற்றி செல்லும் பஸ்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள் என பலவும் அதிக அளவில் சென்று வருகின்றனர். இந்தநிலையில் இந்த பகுதியில் அதிக மழை பெய்யும்போது மழைநீர் பெருக்கெடுத்து இரு கரைகளையும் தொட்டு கொண்டு காட்டாற்று வெள்ளமாக இந்த ஆற்றின் வழியாக செல்கிறது.

இதனால் பாலம் எதுவும் கட்டப்படாத நிலையில் இருந்த ஆற்றுக்குள் இறங்கி சென்ற வாகனங்கள் எதுவும் இந்த வழியாக செல்ல முடியாமல் ஒரு நாள் முழுவதும் சிலவேளைகளில் இரண்டு, மூன்று நாட்களுக்கும் கூட போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனையடுத்து இப்பகுதி மக்கள் இந்த ஆற்றின் வழியாக மேம்பாலம் கட்டித்தர பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்த நிலையில் கடந்த சில ஆண்டுக்கு முன் மேம்பாலத்திற்கு பதிலாக தரைப்பாலம் மட்டும் கட்டப்பட்டது.

கடும் அவதி

ஆனால் இந்த பாலத்தை பெருக்கெடுத்து வரும் வெள்ளநீர் மூழ்கடித்து செல்வதால் வழக்கம்போல் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த பகுதியில் பெய்த அதிக அளவு மழையால் நேற்று காலையில் புங்காற்றில் கட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதையறியாது வந்த வாகன ஓட்டிகள் திரும்பி சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி சென்றனர். இதனால் பள்ளி கல்லூரி செல்ல வேண்டிய மாணவ-மாணவிகள் நேரத்திற்கு செல்லமுடியாமல் கடும் அவதிக்கு உள்ளாயினர்.

ஆனால் ஆபத்தை உணராமல் சில வாகன ஓட்டிகள் தங்களின் வாகனத்தை நீரில் இறக்கி கடந்து செல்ல முயன்றது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. எனவே இந்த ஆற்றின் வழியாக மழை காலங்களில் தடையின்றி வாகனங்கள் சென்று வர மேம்பாலம் கட்டி தர வேண்டும் என வாகன ஓட்டிகளும், அப்பகுதி மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story