நெல்லை சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்
நெல்லை சந்திப்பு அண்ணா சிலையை சுற்றி ரவுண்டானா அமைத்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
நெல்லை சந்திப்பு அண்ணா சிலையை சுற்றி ரவுண்டானா அமைத்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
சந்திப்பு பஸ் நிலையம்
நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக மூடிக்கிடப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் தற்போது, தற்காலிகமாக பஸ் நிலையத்தை சுற்றி வரும் வகையில் டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
ஆனால் சந்திப்பு பஸ் நிலையம் மூடப்படுவதற்கு முன்பு, பஸ் நிலையத்துக்குள் வந்து விட்டு வௌியே, டவுன் வழியாக செல்லும் பஸ்கள் தேவர் சிலை அருகே 'யூடர்ன்' செய்து சென்றன. பஸ் நிலையத்தை மூடிய போது இந்த ரவுண்டானா போன்ற பகுதி மூடப்பட்டது.
போக்குவரத்து நெருக்கடி
சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றி பஸ்கள் இயக்கப்படுவதால், பஸ் நிலையத்தில் இருந்து டவுன் நோக்கி செல்லும் பஸ்கள் கொக்கிரகுளம் எம்.ஜி.ஆர். சிலை வரை கிழக்கு நோக்கி சென்று, அங்கு 'யூடர்ன்' திரும்பி மீண்டும் தேவர் சிலை, அண்ணா சிலை, ஈரடுக்கு மேம்பாலம் வழியாக டவுன் நோக்கி செல்கிறது. இதனால் இருபுறமும் சாலையில் தேவையில்லாத வகையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது.
இதை தவிர்க்கும் வகையில் கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவுப்படி போக்குவரத்து போலீசார், போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ரவுண்டானா அமைப்பு
இந்த நிலையில் அண்ணா சிலையை சுற்றி நேற்று முன்தினம் இரவு தற்காலிக ரவுண்டானா அமைக்கப்பட்டது. நேற்று காலை முதல் சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து டவுனுக்கு செல்லும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் எம்.ஜி.ஆர். சிலைக்கு செல்லாமல், அருகில் உள்ள அண்ணா சிலை ரவுண்டானாவிலேயே திரும்பி செல்கிறது. இந்த பணியை போக்குவரத்து அதிகாரிகள், போக்குவரத்து போலீசார் கண்காணித்தனர். இங்கு போக்குவரத்து பிரச்சினை இன்றி எளிதாக வாகனங்கள் கடந்து சென்றுவிட்டால் நிரந்தர ரவுண்டானா அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.