மெட்ரோ ரெயில் பணிக்காக பூந்தமல்லி பைபாஸ் பகுதியில் தற்காலிக போக்குவரத்து மாற்றம்; ஆகஸ்ட்1-ந்தேதி முதல் அமல்


மெட்ரோ ரெயில் பணிக்காக பூந்தமல்லி பைபாஸ் பகுதியில் தற்காலிக போக்குவரத்து மாற்றம்; ஆகஸ்ட்1-ந்தேதி முதல் அமல்
x

மெட்ரோ ரெயில் பணிக்காக பூந்தமல்லி பைபாஸ் பகுதியில் வருகிற 1-ந்தேதி முதல் 1½ மாதங்களுக்கு தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

காஞ்சிபுரம்

போக்குவரத்து மாற்றம்

இது தொடர்பாக ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பூந்தமல்லி டிரங்க் சாலையில் போரூர் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை நடைபெறும் சென்னை மெட்ரோ ரெயில் திட்ட பணிக்காக தற்போதுள்ள போக்குவரத்து முறையில் பூந்தமல்லி பைபாஸ் பகுதியில் 1-08-2022 முதல் 15-09-2022 வரையில் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் தற்போது பூந்தமல்லிக்கு முன்பாக சென்னை வெளிவட்ட சாலை வழியாக இடதுபுறம் திரும்பிச் செல்லும் வாகனங்கள் வழக்கமான சென்னை வெளிவட்ட சாலையின் சர்வீஸ் ரோட்டில் இடதுபுறம் திரும்பி செல்கின்றன. அவ்வாறான வாகனங்கள் மட்டும் வழக்கமாக இடதுபுறம் திரும்பும் இடத்தில் திரும்பாமல் மெயின் ரோட்டிலேயே அங்கிருந்து சுமார் 200 மீட்டர் தாண்டி சென்று 2 வெளிவட்ட சாலை பாலங்களுக்கு இடையில் உள்ள சாலை வழியாக இடது புறமாக செல்லவேண்டும்.

ஒத்துழைப்பு

அதேபோல் சென்னை வெளிவட்ட சாலையில் வண்டலூரில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் தற்போது பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை அருகில் இடதுபுறம் திரும்பி சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையை அடைந்து பூந்தமல்லி நோக்கி செல்கின்றன. அந்த வாகனங்கள் அனைத்தும் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை அருகில் சென்னை வெளிவட்ட சாலை பாலத்திலிருந்து இடதுபுறம் திரும்பாமல் சென்னை வெளிவட்ட சாலையிலேயே நேராகச் சென்று கோலப்பஞ்சேரி சுங்கச்சாவடிக்கு முன்பு வலதுபுறம் 'யு டர்ன்' போட்டு திரும்பி சென்னை வெளிவட்ட சாலையிலேயே பூந்தமல்லி பைபாஸ் பகுதி வரை வந்து பின்னர் பெங்களூரு-சென்னை நெடுஞ்சாலையில் இணைந்து சென்று சேர வேண்டிய இடங்களுக்கு சென்றடையலாம்.

மேற்படி பணியினை விரைந்து முடிக்க இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story