கோவை-அவினாசி சாலையில் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது


கோவை-அவினாசி சாலையில் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது
x
தினத்தந்தி 8 Oct 2023 9:00 PM GMT (Updated: 8 Oct 2023 9:00 PM GMT)

மேம்பால பணிக்காக கோவை-அவினாசி சாலை நேற்று முதல் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது. இதையடுத்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

கோயம்புத்தூர்

மேம்பால பணிக்காக கோவை-அவினாசி சாலை நேற்று முதல் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது. இதையடுத்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

மேம்பாலம் கட்டும் பணி

கோவை மாநகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கோவை-திருச்சி சாலை, அவினாசி சாலை, குனியமுத்தூர் சாலை உள்ளிட்ட இடங்களில் மேம்பாலங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதில் கோவை-திருச்சி சாலையில் மேம்பாலம் கட்டும் பணி நிறைவடைந்தது.

அவினாசி சாலை மற்றும் உக்கடம்-ஆத்துப்பாலம் சாலையில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு 1,650 கோடி செலவில் மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன. இதற்காக 304 கான்கிரீட் தூண்கள் கட்டப்பட்டு உள்ளது.

போக்குவரத்து மாற்றம்

இதுதவிர அவினாசி சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகாலும் அமைக்கப்பட்டு வருகிறது. மேம்பால பணியை துரிதமாக மேற்கொள்ளும் வகையில் அவினாசி சாலையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும் என்று மாநகர போலீசார் அறிவித்து இருந்தனர். இதன்படி கோவை-அவினாசி சாலையில் போக்குவரத்து மாற்றம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.

அதன்படி அவினாசி ரோடு பழைய மேம்பாலத்தில் இருந்து பீளமேடு நோக்கி செல்ல வேண்டிய வாகனங்கள் நஞ்சப்பா ரோடு, பார்க் கேட் ரவுண்டானா, சிறைச்சாலை ரோடு வழியாக எல்.ஐ.சி. சிக்னலை அடைந்து அவினாசி ரோட்டில் பயணிக்கலாம். மேலும் உப்பிலிபாளையம் சிக்னல் அருகே வலது புறம் திரும்பி ஹூசூர் ரோடு, எல்.ஐ.சி. சிக்னல் வழியாக அவினாசி ரோட்டில் பயணிக்கலாம்.

அண்ணா சிலை சிக்னல்

அண்ணா சிலை சிக்னலில் இருந்து எல்.ஐ.சி. சிக்னலுக்கு செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்படாது. இதற்கு பதிலாக அண்ணா சிலை சிக்னல் பகுதியில் இருந்து வாகனங்கள் இடது புறம் திரும்பி ஹூசூர் ரோடு, கோர்ட்டு ரோடு வழியாக உப்பிலிபாளையத்தை அடைந்து அங்கிருந்து பழைய மேம்பாலம் செல்லலாம். மேலும் ஹூசூர் ரோட்டில் இருந்து வலது புறம் திரும்பி எல்.ஐ.சி. சிக்னல் வழியாக பார்க்கேட் செல்லலாம்.

மேலும் அண்ணா சிலை சிக்னலில் இருந்து வலது புறம் திரும்பி பாலசுந்தரம் சாலை வழியாக வழக்கம்போல் காந்திபுரம் செல்லலாம். இந்த போக்குவரத்து மாற்றத்தை தொடர்ந்து எல்.ஐ.சி. சிக்னல், உப்பிலிபாளையம் சிக்னல், அண்ணாசிலை சிக்னல் ஆகிய இடங்களில் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளன. இதுதவிர போக்குவரத்து மாற்றம் குறித்து ஆங்காங்கே அறிவிப்பு பேனர்களும் வைக்கப்பட்டு உள்ளன.

ஒழுங்குப்படுத்தும் பணியில் போலீசார்

மேலும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். நேற்று விடுமுறை நாள் என்பதால் இந்த போக்குவரத்து மாற்றம் காரணமாக பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

ஆனால் இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் அனைத்தும் செயல்படும் என்பதால் போக்குவரத்து மாற்றத்தால் பாதிப்பு ஏற்படலாம். எனவே இதனை கருத்தில் கொண்டு இன்று கூடுதல் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்த பட உள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story