திருச்சி ரோடு - கவுண்டம்பாளையம் மேம்பாலங்களில் போக்குவரத்து தொடங்கியது


திருச்சி ரோடு - கவுண்டம்பாளையம் மேம்பாலங்களில் போக்குவரத்து தொடங்கியது
x

கோவையில் புதிதாக திறக்கப்பட்ட திருச்சி ரோடு-கவுண்டம் பாளையம் மேம்பாலங் களில் போக்குவரத்து தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோயம்புத்தூர்

கோவை,

கோவையில் புதிதாக திறக்கப்பட்ட திருச்சி ரோடு-கவுண்டம் பாளையம் மேம்பாலங் களில் போக்குவரத்து தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேம்பாலங்கள்

கோவை திருச்சி ரோடு கவுண்டம்பாளையம் பகுதிகளில் கடந்த 2019-ம் ஆண்டு மேம்பாலங்கள் கட்டும் பணி தொடங்கியது. திருச்சி ரோடு ரெயின்போ பகுதியில் இருந்து பங்கு சந்தை அலுவலகம்வரை 4 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.230கோடியில் இந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது.

இதே போல கவுண்டம்பாளையம் பகுதியில் 1.17 கி.மீ தூரத்திற்கு ரூ.60 கோடியில் கட்டப்பட்ட மேம்பால பணிகளும் நிறைவடைத்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் 2பாலங்களையும் திறந்து வைத்தார்.

அமைச்சர் கொடியசைத்து வைத்தார்

கோவை ராமநாதபுரம் பகுதியில் நடைபெற்ற பாலம் திறப்பு விழா நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு கொடியசைத்து போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறும்போது, கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக இந்த மேம்பாலபணிகளை தமிழக அரசு விரைவு படுத்தி பணிகளை முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. பாலங்கள் திறப்பு வரலாற்று சிறப்பு நிகழ்வு. மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்கு இந்த பாலங்கள் பயனுள்ள வகையில் இருக்கும் என்று தெரிவித்தார்.

இதேபோல் கவுண்டம்பாளையம் பாலத்தையும் அமைச்சர் செந்தில்பாலாஜி, கொடியசைத்து போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறும்போது, தி.மு.க, பா.ஜ.க, அ.தி.மு.கவை சேர்ந்தவர்கள் இணைந்து இந்த பாலத்தை திறந்து வைத்திருப்பது மகிழ்ச்சி. மாவட்டத்திற்கு இன்னும் பல இடங்களில் பாலங்கள் தேவை. நெரிசல் மிகுந்த இடங்களை கண்டறிந்து பாலங்கள் அமைக்கவும், மெட்ரோ ரெயில் திட்டத்தை அமல்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

பொதுமக்கள் மகிழ்ச்சி

திருச்சி ரோடு பாலம் மிகுந்த பயனுள்ள வகையில் இருப்பதாகவும், சாதாரணமாக சுங்கம், ராமநாதபுரம் சிக்னல்களை கடக்க 20 முதல் அரை மணி நேரமாகும் நிலையில் பாலம் பயன்பயன்பாட்டிற்கு வந்து இருப்பதால் மிக எளிதாக இந்த பகுதிகளை கடக்க முடிவதாகவும் பொது மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.கவுண்டம்பாளையம் பகுதியில் ஏற்கனவே மற்றொரு மேம்பால பணிகள் நடைபெற்ற நிலையில் இந்த பாலம் திறக்கப்படாமல் இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. தற்போது கவுண்டம்பாளையம் பாலமும் திறக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைத்து இருப்பதாக அந்த பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். 2 பாலங்களும் போக்குவரத்து பயன்பாட்டுக்கு வந்து இருப்பது கோவை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திறப்பு விழாவில், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், பி.ஆர் ஜி.அருண்குமார், ஏ.கே.செல்வராஜ், கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா, ஐ.ஜி.சுதாகர், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு என்ஜினீயர் சரவணன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, நா.கார்த்திக், பையா கிருஷ்ணன், முன்னாள் எம்.பி.நாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story