பெயர் பலகை அமைக்கும் பணியால் போக்குவரத்து பாதிப்பு
பெயர் பலகை அமைக்கும் பணியால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு அணிவகுத்து நின்ற வாகனங்களால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
பெயர் பலகை அமைக்கும் பணி
கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் முதல் பாலத்துறை வரை சேலம்-கரூர், கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணியும், பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கும் பணியும் நடைபெற்று முடிவடையும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக தவுட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியனை உடைத்து அந்த வழியாக சென்ற அனைத்து வாகனங்களும் அந்த வழியாக செல்ல முடியாதபடி நெடுகிலும் இரும்பு தடுப்புகள் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு தேசிய நெடுஞ்சாலையும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் மேம்பாலம் கட்டும் பணி முடிவடையும் நிலையில் உள்ளதால் சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் காவிரி ஆற்று பாலம் அருகே ஓரத்தில் ஊர் பெயர் வழிகாட்டி இரும்பு பலகை அமைக்கும் பணி நேற்று மாலை நடைபெற்றது.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது கிரேன் எந்திரம் வரவழைக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே கிரேன் எந்திரம் நிறுத்தப்பட்டு இரும்பு பெயர்பலகை நடும் பணி நடைபெற்றது. இதனால் நீண்ட நேரம் பரமத்தி வேலூர் போலீஸ் சோதனை சாவடி காவிரி ஆற்று பாலம் முதல் தவுட்டுப்பாளையம் போலீஸ் சோதனை சாவடி வரை தனியார் மற்றும் அரசு பஸ்கள் உள்பட பல்வேறு வகையான லாரிகள், கார்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் பஸ்களில் பயணம் செய்த பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு தாங்கள் பயணம் செய்யும் இடத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
அதேபோல் கார்களில் சென்றவர்களும், ஆம்புலன்ஸ் வாகனங்களும் நீண்ட நேரம் வாகனங்களை நிறுத்தி அவசரத்திற்கு உடனடியாக செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். நீண்ட நேரத்திற்கு பிறகு சிறிது நேரம் கிரேன் வாகனம் ஓரமாக நிறுத்தப்பட்டு, அணிவகுத்து நின்ற வாகனங்கள் அனுப்பப்பட்டது. பின்னர் மீண்டும் கிரேன் எந்திரத்தை நடுவில் நிறுத்தி மீண்டும் பணியை தொடங்கினார்கள். இதனால் வாகன ஓட்டிகள் தொடர்ந்து அவதிப்பட்டனர். இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.