சாலையை திடீரென அடைத்ததால் போக்குவரத்து நெருக்கடி


சாலையை  திடீரென அடைத்ததால் போக்குவரத்து நெருக்கடி
x

லட்சுமி மில்ஸ் சிக்னலில் இருந்து அண்ணா சிலை செல்லும் சாலையை திடீரென அடைத்ததால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

கோயம்புத்தூர்

லட்சுமி மில்ஸ் சிக்னலில் இருந்து அண்ணா சிலை செல்லும் சாலையை திடீரென அடைத்ததால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

சிக்னலில் சாலை அடைப்பு

கோவையில் மழை காரணமாக மாநகரில் உள்ள அவினாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் ரோடு, உக்கடம் பைபாஸ் ரோடு, பேரூர் மெயின் ரோடு உள்ளிட்ட சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இது ஒரு புறம் இருக்க நேற்று மாலை மழை பெய்து கொண்டே இருந்தவேளையில் கோவை அவினாசி சாலை லட்சுமி மில்ஸ் சிக்னலில் இருந்து அண்ணா சிலை செல்லும் சாலையை இரும்பு தடுப்புகள் வைத்து போலீசார் திடீரென அடைத்தனர்.

இதனால் அந்த சாலையில் செல்ல வேண்டிய வாகனங்களை இடது புறமாக புலியகுளம் செல்லும் சாலையிலும், வலது புறம் பாப்பநாயக்கன் பாளையம் வழியாக காந்திபுரம் செல்லும் பாரதியார் சாலையிலும் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

இதனால் எங்கு செல்வது என்று தெரியாமல் வாகன ஓட்டிகள் திக்குமுக்காடினர். இதன் காரணமாக அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆம்புலன்ஸ்கள் தவிப்பு

மேலும் அந்த நேரத்தில் பீளமேட்டில் இருந்து கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லக்கூடிய ஆம்புலன்ஸ்கள் வந்தன. ஆனால் அங்கு ஏற்பட்டு இருந்த கடும் போக்குவரத்து நெரிசலால் ஆம்புலன்ஸ்கள் செல்ல முடியாமல் தவித்த பரிதாப நிலை ஏற்பட்டது.

அப்போது லட்சுமி மில்ஸ் சிக்னலில் போக்குவரத்தை சரி செய்து கொண்டிருந்த போலீசாரும் செய்வதறியாது தவித்தனர். அங்கு சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஆம்புலன்ஸ் வாகனங்கள் காத்து நின்றன.

பின்னர் சிக்னலில் நின்ற போலீசார் ஒலிபெருக்கி மூலம் ஆம்புலன்ஸ்க்கு வழி விடுமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறினர். அந்த ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு மட்டும் அண்ணா சிலையை நோக்கி செல்வதற்கு வழியை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

வாகன ஓட்டிகள் கடும் அவதி

எவ்வித திட்டமிடாமல் போலீசார் லட்சுமி மில்ஸ் சிக்னலில் ஒருபுறம் முழுவதும் சாலையை இரும்பு தடுப்புகள் வைத்து அடைத்ததால் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவித்து அவதிக்கு உள்ளாகினார்கள்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

இதுபோன்று போக்குவரத்து நெருக்கடி ஆகும் நேரத்தில் போலீசார் பெரிய சாலையில் இரும்பு தடுப்புகள் வைத்து அடைத்தால் அந்த சாலையில் செல்ல வேண்டிய வாகன ஓட்டிகள் மற்ற சாலையில் திருப்பி விடுவதால் அந்த சாலையிலும் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

போலீசாரின் திட்டமிடாத இந்த செயல் வாகன ஓட்டிகளை கடுமையான அவதிக்கு உள்ளாக்கியது. ஆம்புலன்ஸ் வாகனங்களும் திக்கு முக்காடி செல்வதை காண முடிந்தது.

ஏன் இவ்வாறு சாலையை அடைத்து வைத்துள்ளீர்கள் என்று கேட்டபோது அவினாசி சாலை மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுப்பதற்காக லட்சுமி மில்ஸ் சிக்னலில் இருந்து அங்கு செல்லும் வாகனங்களை தவிர்ப்பதற்காக சாலையை அடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஆனால் லட்சுமி மில்ஸ் சாலையை அடைப்பதற்கு பதில் அண்ணா சிலை சிக்னல் அல்லது எல்.ஐ.சி. சிக்னலில் அடைத்து வாகனங்களை திருப்பி விட்டிருக்கலாம்.போதிய திட்டமிடாத காரணத்தால் நகர் முழுவதும் போக்கு வரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

இனிவரும் காலங்களில் இது போன்று சம்பவங்கள் அரங்கேறாமல் திட்டமிட்டு போலீசார் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story