பள்ளத்தில் சிக்கிய டிராக்டரால் போக்குவரத்து நெரிசல்


பள்ளத்தில் சிக்கிய டிராக்டரால் போக்குவரத்து நெரிசல்
x

கரூர் அருகே பள்ளத்தில் சிக்கிய டிராக்டரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

கரூர்

சாலை விரிவாக்க பணி

கரூர் மாவட்டம் நொய்யல் குறுக்கு சாலை முதல் கந்தம்பாளையம் வரை தார் சாலையின் இருபுறமும் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக நடையனூர் தனியார் பள்ளிமுதல் கந்தம்பாளையம் வரை தார் சாலையின் ஓரத்தில் இருபுறமும் 3 அடி ஆழத்தில் 3 அடி அகலத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் நெடுகிலும் பள்ளம் பறிக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் பறிக்கப்பட்ட பள்ளத்தில் ஜல்லியுடன் செயற்கை மணல் கலந்து நிரப்பி வருகின்றனர்.

இந்நிலையில் நடையனூர் தனியார் பள்ளி எதிரில் தார் சாலையின் குறுக்கேயுள்ள பழைய பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியது. அதன் அடிப்படையில் தார் சாலையின் பாதிப்பகுதியில் பழைய பாலத்தை உடைத்து விட்டு பள்ளம் பறித்து புதிய பாலம் கட்டப்பட்டது.

பாலம் கட்டப்பட்ட பகுதியின் அருகில் பெரிய பள்ளம் இருந்தது. அந்த பள்ளத்தில் மண்ணை போட்டு நிரப்பினர். பின்னர் தார் சாலையில் மீதி உள்ள பழைய பாலத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பள்ளத்தில் சிக்கிய டிராக்டர்

இந்நிலையில் வேலாயுதம்பாளையம் பகுதியில் இருந்து நொய்யல் பகுதிக்கு செங்கற்களை ஏற்றிக்கொண்டு ஒரு டிராக்டர் வந்தது. அந்த டிராக்டர் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தில் ஏறியபோது, பாலத்தை ஒட்டி திடீரென ஏற்பட்டு பள்ளத்தில் டிராக்டரின் சக்கரம் சிக்கிக் கொண்டது.

டிரைவர் முயற்சி செய்தும் தொடர்ந்து பள்ளத்திற்குள் இறங்கிக் கொண்டிருந்தது. இதையடுத்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு குழியில் சிக்கிக் கொண்ட டிராக்டரை தள்ளினார்கள். அப்போது டிராக்டர் என்ஜின் கவிழும் நிலைக்கு வந்தது. இதனால் அந்த பணி நிறுத்தப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் அந்த பகுதி வழியாக வந்த அனைத்து வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பின்னர் மற்றொரு பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து 2 பொக்லைன் எந்திரமும் சேர்ந்து பள்ளத்தில் சிக்கிய டிராக்டரை லாபகமாக மேலே தூக்கி கொண்டு வந்தனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். பின்னர் போக்குவரத்து சீரானதும் அனைத்து வாகனங்களும் அங்கிருந்து வரிசையாக சென்றன.


Next Story