பாலத்தின் அடிப்பாகம் உடைந்து, போக்குவரத்து பாதிப்பு:தற்காலிக சாலை அமைத்து கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தொடக்கம்
கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தரைப்பாலத்தின் அடிப்பாகம் உடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் இரவு, பகலாக தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் பணியாற்றி தற்காலிக சாலையை அமைத்ததால் வாகன போக்குவரத்து தொடங்கியது.
கூடலூர்: கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தரைப்பாலத்தின் அடிப்பாகம் உடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் இரவு, பகலாக தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் பணியாற்றி தற்காலிக சாலையை அமைத்ததால் வாகன போக்குவரத்து தொடங்கியது.
தரைப்பாலம் உடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு
கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதனால் கர்நாடகம், கூடலூரில் இருந்து ஏராளமான வாகனங்கள் ஊட்டிக்கு சென்று திரும்புகிறது.
இந்த நிலையில் கூடலூர் நகராட்சிக்குட்பட்ட மேல் கூடலூரில், கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் தரைப்பாலம் உள்ளது. இப்பகுதியில் சாலை விரிவாக்க பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை 5.30 மணிக்கு தரைப்பாலத்தின் அடிபாகத்தில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் உருவானது. இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடலூர்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் தரைப்பாலத்தை சுற்றி இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டது. இதன்காரணமாக அந்த வழியாக வந்த சுற்றுலா வாகனங்கள், சரக்கு லாரிகள், அரசு பஸ்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அவதி
ஆனாலும் பாலத்தின் ஒருபுற பகுதி வழியாக சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் நடந்து செல்வதற்கு அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இதற்கிடையே ஊட்டியில் இருந்து வந்த அரசு பஸ்சை மீண்டும் ஊட்டிக்கு திருப்பி இயக்கியதால் பொதுமக்கள் அதை பயன்படுத்தி ஊட்டிக்கு திரும்பி சென்றனர். ஆனால் கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்த சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் போக்குவரத்து இன்றி இரவு முழுவதும் நடுவழியில் நின்று தவித்தனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அம்ரித், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உத்தரவின் பேரில் கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா, தாசில்தார் ராஜேஸ்வரி, போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ், தேசிய நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் செல்வம் உள்பட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் இரவு முழுவதும் அப்பகுதியில் முகாமிட்டு, வாகன போக்குவரத்தை சரிசெய்ய உடைந்த பாலத்தை ஒட்டி தற்காலிக சாலை அமைக்க முடிவு செய்து பணியை தொடங்கி வைத்தனர்.
போக்குவரத்து தொடக்கம்
அதன்படி தரைப்பாலத்தை ஒட்டிய பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளங்கள் தோண்டப்பட்டு சிமெண்ட், ஜல்லி கலவைகள் கொட்டப்பட்டு தற்காலிக சாலை அமைக்கும் பணி நடந்தது. இரவு, பகலாக கொட்டும் பனியில் சாலை அமைக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டனர்.
பின்னர் சாலை பணிகள் முடிந்து நேற்று காலை 9.30 மணியளவில் வாகன போக்குவரத்து சோதனை செய்யப்பட்டது. இதில் எந்த பாதிப்பும் ஏற்படாததால் அனைத்து வாகனங்களுக்கான போக்குவரத்து தொடங்கியது. அதாவது தரைப்பாலத்தின் அடிப்பாகம் உடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்ட நேரம் தொடங்கி, தற்காலிக சாலை அமைக்கப்பட்டு சுமார் 16 மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து தொடங்கியது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர். முன்னதாக அதிகாலையில் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டும் தலைக்குந்தா, கல்லட்டி, மசினகுடி வழியாக கூடலூருக்கு இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.