வாகனம் மோதி பழவியாபாரி பலி


வாகனம் மோதி பழவியாபாரி பலி
x

வாகனம் மோதி பழவியாபாரி பலியானார்.

பெரம்பலூர்

கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, வசிஷ்டபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 42). இவர் திட்டக்குடி பஸ் நிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளாக கொய்யாப்பழ வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி வேல்விழி(30). இவர்களுக்கு அஸ்வின்(10), சஸ்வின்(6) என்ற இருமகன்களும், சுபிக்சா(3) என்ற மகளும் உள்ளனர். இவர் வழக்கமாக விழுப்புரத்திற்கு சென்று கொய்யாப்பழங்களை மொத்த விலையில் வாங்கி வந்து விற்பது வழக்கம். விநாயகர் சதுர்த்தியையொட்டி நெல்லிக்காய் மற்றும் விளாம்பழம் மொத்த விலையில் வாங்குவதற்காக பாபு தனது மனைவியிடம் ரூ.2,500-ஐ வாங்கிக்கொண்டு, மோட்டார் சைக்கிளில் திருச்சிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு செல்லும் வழியில் பெரம்பலூர் வந்துவிட்டு, கலெக்டர் அலுவலக சாலைவழியாக திருச்சி-சென்னை நான்குவழிச்சாலையில் துறைமங்கலம் ஏரிக்கரை அருகே திருச்சியை நோக்கி யூ வளைவில் திரும்புவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் பாபுவின் மோட்டார் சைக்கிளில் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி எறியப்பட்ட பாபு ரத்தம் சொட்டிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேல்விழி அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தையும், அதன்டிரைவரையும் தேடி வருகின்றனர்.


Next Story