தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெருக்கடி
தளி, ஜூன்.5-
உடுமலை கபூர்கான் வீதியில் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.இதற்கு தீர்வு காண கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து நெரிசல்
உடுமலை நகரில் உள்ள பிரதான சாலைகளில் கபூர்கான் வீதியும் ஒன்று. மத்திய பஸ் நிலையத்தின் அருகே ஆரம்பிக்கும் பிரதான சாலையானது ரெயில் நிலையத்தை அடைந்து கபூர்கான் வீதி, ராமசாமி நகர் வழியாக சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்கிறது.இந்த சாலையில் வணிக வளாகங்கள், தனியார் அலுவலகங்கள், உழவர் சந்தை உள்ளது.
இதன் காரணமாக வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் உழவர் சந்தைக்கு அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. அதை சீரமைப்பதற்கு அதிகாரிகள் முன் வருவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:- உடுமலை மற்றும் சுற்றுப் புற பகுதிகளுக்கு செல்வதற்கு நகரின் ஒதுக்குப்புறமாக ெரயில்வே பாதையை யொட்டி அமைந்துள்ள இந்த சாலை பெரிதும் உதவிகரமாக உள்ளது. இதனால் நகரம் மற்றும் கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த சூழலில் உழவர் சந்தைக்கு வருகின்ற வாகனங்கள் சாலையில் தாறுமாறாக நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் மற்ற வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.
உழவர் சந்தையை மேம்பாடு செய்து விரிவுபடுத்துவதற்கு கோரிக்கை விடுத்தும் நிலுவையில் உள்ளது. அதுமட்டுமின்றி கபூர்கான் வீதியின் ஓரங்களில் காலை வேளையில் சில்லறை விற்பனை கடைகளும் மதியம் முதல் இரவு வரையிலும் தள்ளுவண்டி கடைகளும் ஆக்கிரமிப்பு செய்து விடுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் என்பது தொடர்ந்து இருந்து கொண்டே உள்ளது. அதை ஒழுங்குபடுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வருவதில்லை.
தீர்வு காணப்படுமா?
ஒரு சிலர் வியாபார நோக்கோடு செய்யும் இடையூறுகளால் ெரயில் பயணத்திற்காக செல்கின்ற பொதுமக்கள் ெரயிலை தவற விட்டு பாதிப்படைவது வேதனை அளிக்கிறது.
அத்துடன் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்துக்களில் சிக்கும் சூழல் நிலவுகிறது. எனவே உடுமலை கபூர்கான் வீதியில் நிலவி வருகின்ற போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று தெரிவித்தனர்.