திருப்பூரில் போக்குவரத்து நெரிசல்


திருப்பூரில் போக்குவரத்து நெரிசல்
x
திருப்பூர்


திருப்பூர் மாநகரில் பள்ளிகள் உள்ள பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் போலீசாரை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து நெரிசல்

திருப்பூர் மாநகரில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் திருப்பூரில் பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக திருப்பூர் வடக்கு பகுதியான குமார்நகர், அங்கேரிபாளையம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கும்தனியார் மற்றும் அரசு பள்ளிகள் முன்பு போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

இதனால் குழந்தைகளை பள்ளிகளுக்கு அழைத்து வரும் பெற்றோர் மற்றும் அந்த நேரத்தில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் என அனைவரும் ஒரே நேரத்தில் செல்வதே போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி முன்பு அரை மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்குள்ள அனைத்து வீதிகள் மற்றும் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு வாகன ஓட்டிகள் தாறுமாறாக சென்றனர். மேலும் வாகன ஓட்டிகளுக்குள் வாக்குவாதமும் ஏற்பட்டது. இதனால் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

கோரிக்கை

அங்கு போக்குவரத்தை சரி செய்வதற்கு போலீசார் யாரும் வராததால் சமூக ஆர்வலர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் சாலையில் நின்று போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். எனவே திருப்பூர் மாநகர் முழுவதும் பள்ளிகள் உள்ள பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் போலீசாரை பணியமர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story