மீன்பிடி திருவிழாவில் சோகம்: குளத்தின் சேற்றில் சிக்கி கல்லூரி மாணவர் பலி
விராலிமலை அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் குளத்தின் சேற்றில் சிக்கி கல்லூரி மாணவர் பலியானார்.
மீன்பிடி திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா கல்குடி பெரிய குளத்தில் நேற்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கல்குடி கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து பொதுமக்கள் அதிகாலையிலேயே பெரியகுளத்தில் திரண்டனர்.
இதையடுத்து, ஊர் முக்கியஸ்தர்கள் வெள்ளைதுண்டு வீசியதையடுத்து குளத்தின் கரையில் தயாராக நின்ற பொதுமக்கள் தாங்கள் கொண்டுவந்த வலை, தூரி, கச்சா உள்ளிட்டவைகளை கொண்டு குளத்தில் மீன்களை பிடிக்க இறங்கினர். இதில் விரால், அயிரை, கெழுத்தி, கெண்டை, குரவை உள்ளிட்ட மீன்களை கிராமமக்கள் பிடித்து சென்றனர்.
திருச்சி கல்லூரி மாணவர் பலி
மீன்பிடி திருவிழாவிற்கு சூரியூர் எழுவம்பட்டியை சேர்ந்த விவசாயி முருகன் என்பவர் தனது மகன் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்த தங்கவேலுவுடன் (வயது 21) சேர்ந்து வலையில் மீன்பிடித்து கொண்டிருந்தார். அப்போது மீன் பிடிக்கும் ஆர்வத்தில் குளத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கியபோது தங்கவேலின் கால் சேற்றில் சிக்கி வெளியே வர முடியாமல் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளார்.
இந்தநிலையில் தனது மகனை காணாததைக்கண்டு அதிர்ச்சியடைந்த முருகன் உடன் இருந்தவர்களுடன் சேர்ந்து தேடியபோது தங்கவேல் தண்ணீருக்குள் மூழ்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தங்கவேலை உடன் இருந்தவர்களுடன் மீட்டு சிகிச்சைக்காக விராலிமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தங்கவேல் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விராலிமலை அருகே மீன்பிடிக்க சென்ற கல்லூரி மாணவர் சேற்றில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.