சென்னையில் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் சோகம்; குளத்தில் மூழ்கி 5 பேர் பலி


சென்னையில் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் சோகம்; குளத்தில் மூழ்கி 5 பேர் பலி
x

சென்னையில் நேற்று நடந்த கோவில் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் குளத்தில் மூழ்கி 5 பேர் பலியானார்கள். ஒருவரை ஒருவர் காப்பாற்ற முயன்றபோது அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த நங்கநல்லூர் எம்.எம்.டி.சி. காலனியில் பழமையான தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் பங்குனி உத்திரவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

தீர்த்தவாரி நிகழ்ச்சி

விழாவையொட்டி நேற்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. கோவிலில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவில் மூவரசம்பட்டு பகுதியில் உள்ள குளத்தில் தீர்த்தவாரி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதற்காக அர்ச்சகர்கள், தன்னார்வலர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர், காலை 9 மணியளவில் கோவிலில் இருந்து உற்சவர் சாமி சிலையை பல்லக்கில் வைத்துக்கொண்டு மேளதாளத்துடன் ஊர்வலமாக மூவரசம்பட்டு குளத்துக்கு கொண்டு சென்றனர்.

பாதுகாப்பு வளையம்

சுமார் 20 அடி ஆழம் கொண்ட அந்த குளத்தில் அதிக அளவில் சேறும்சகதியும் நிறைந்து இருந்தது. எனவே தன்னார்வலர்கள் 25 பேர் முதலில் குளத்தில் இறங்கி, தீர்த்தவாரி நிகழ்ச்சி நடத்த பாதுகாப்பு வளையமாக ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி சங்கிலிபோல் நின்று கொண்டனர். அதைத்தொடர்ந்து அர்ச்சகர்கள் 5 பேர் பல்லக்கில் இருந்த சாமி சிலையை ஒருவர் கையில் தூக்கிக்கொள்ள, மற்றவர்கள் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி ஒன்றாக குளத்தில் இறங்கினர்.

பின்னர் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அர்ச்சகர்கள் கையில் இருந்த உற்சவர் சாமி சிலையுடன் குளத்தில் நீராடினர். இவ்வாறு 3 முறை அர்ச்சகர்கள் சாமி சிலையுடன் குளத்தில் மூழ்கி எழுந்தனர்.

நீரில் மூழ்கி 5 பேர் பலி

3-வது முறையாக சாமி சிலையுடன் அர்ச்சகர்கள் நீரில் மூழ்கியபோது அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக சங்கிலி போல் கைகோர்த்து நின்ற தன்னார்வலர்களில் ஒருவர், திடீரென நிலைதடுமாறி குளத்தில் இருந்த சேற்றில் கால் வைத்து விட்டார். இதில் சிக்கி அவர் நீரில் மூழ்கி தத்தளித்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தன்னார்வலர்கள் ஒருவர் பின் ஒருவராக அவரை காப்பாற்ற முயன்றனர். கண்இமைக்கும் நேரத்தில் அவர்களும் அடுத்தடுத்து சேற்றில் சிக்கி நீரில் மூழ்கினர். இவ்வாறு அடுத்தடுத்து 5 பேரும் நீரில் மூழ்கி பலியானார்கள். அவர்களில் யாருக்கும் நீச்சல் தெரியாததாலும், சேற்றில் சிக்கியதாலும் இந்த விபரீதம் நிகழ்ந்து விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அர்ச்சகர்கள் உள்பட மற்ற அனைவரும் பதறி அடித்துக்கொண்டு கரைக்கு திரும்பி வந்தனர்.

தீர்த்தவாரி நிகழ்ச்சியில் நங்கநல்லூர், மூவரசம்பட்டு, பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். குளத்தில் அடுத்தடுத்து 5 பேர் மூழ்கியதை பார்த்த அவர்களும் பதறி துடித்தார்கள். ஆனால் யாராலும் நீரில் மூழ்கியவர்களை காப்பாற்ற முடியவில்லை. பின்னர் பொதுமக்களில் சிலர் குளத்தில் மூழ்கிய 4 பேரின் உடல்களை மீட்டனர். ஆனால் ஒருவர் உடல் மட்டும் நீண்ட நேரமாக தேடியும் கிடைக்கவில்லை.

கல்லூரி மாணவர்கள்

இது பற்றி தகவல் அறிந்ததும் கிண்டி, வேளச்சேரி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து, ரப்பர் படகு உதவியுடன் சுமார் 1 மணி நேரம் போராடி பலியான 5-வது நபரின் உடலையும் மீட்டனர். பலியான 5 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பலியான 5 பேரின் பெயர் விவரம் வருமாறு:-

1. ராகவ் (வயது 19) புழுதிவாக்கம் முத்து முகமது தெருவைச் சேர்ந்தவர்.

2.வனேஷ் (19) நங்கநல்லூர் எம்.எம்.டி.சி. காலனியை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் சி.ஏ. படித்து வந்தனர்.

3. ராகவன் (22) புழுதிவாக்கம் ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர். இவர், சி.ஏ.படித்து விட்டு பயிற்சியில் இருந்தார்.

4.சூர்யா (22) நங்கநல்லூர் எம்.எம்.டி.சி. இவர், தனியார் தொலைக்காட்சியில் மேக்கப் கலைஞர்.

5. யோகேஸ்வரன் (23) மடிப்பாக்கம் பாலையா கார்டன் பகுதியை சேர்ந்தவர். இவர், ஒரகடத்தில் உள்ள தனியார் கார் கம்பெனியில் பணியாற்றி வந்தார்.

இவர்கள் 5 பேரும் நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் தன்னார்வலராக இருந்து கோவில் பணிகள் செய்வது வழக்கம்.

கோவில் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் 5 பேர் பலியான சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன், மூவரசம்பட்டு ஊராட்சி தலைவர் ஜி.கே.ரவி, சென்னை மாவட்டம்-2 அறநிலைய துறை இணை கமிஷனர் ரேணுகா தேவி மற்றும் அதிகாரிகள் குளத்தை ஆய்வு செய்து கோவில் நிர்வாகிகளிடம் விசாரித்தனர்.

இந்த சம்பவம் நங்கநல்லூர், பழவந்தாங்கல், மூவரசம்பட்டு ஆகிய பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி பழவந்தாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

போலீஸ் கமிஷனர் விசாரணை

சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், கூடுதல் கமிஷனர் பிரேம் ஆன்ந்த் சின்கா, இணை கமிஷனர் சிபி சக்கரவர்த்தி, துணை கமிஷனர் தீபக், உதவி கமிஷனர்கள் அமீர் அகமது, பிராங்க் டி ரூபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நிருபர்களிடம் கூறியதாவது:-

குளத்தில் மூழ்கி பலியான 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. குளத்தில் வேறு யாரும் இல்லை. ஆழமான பகுதிக்கு சென்றதால் விபத்து நடந்து உள்ளது.

இதுபற்றி கோவில் நிர்வாகிகளிடம் விசாரிக்கப்படும். இந்த குளம் பஞ்சாயத்துக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. குளத்தில் ஆழமாக இருப்பதால் வருங்காலத்தில் எந்தவித சம்பவங்களும் நடக்காமல் இருக்க பார்த்து கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் ஆறுதல்

பலியான 5 பேரின் உறவினர்கள், குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் கதறி அழுதபடி இருந்தனர். சம்பவம் குறித்து அறிந்ததும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று, பலியானவர்களின் குடும்பத்தினர், உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் ஜி.காமராஜ், தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் அழகுமீனா, தாம்பரம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் அதிவீரபாண்டியன், உதவி கமிஷனர் சீனிவாசன், குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் பழனிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறும்போது, "தகுந்த பாதுகாப்புடன் இந்த நிகழ்ச்சியை நடத்தி இருக்க வேண்டும். இதுபற்றி போலீசாருக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். நான் சட்டமன்றத்தில் இருந்தபோது இந்த தகவல் வந்தது. உடனடியாக முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்றேன். அவர் நேரில் செல்லுங்கள் என்று கூறினார். பலியான 5 பேரின் குடும்பத்தினருக்கும் முதல்-அமைச்சர் சார்பில் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.

உரிய அனுமதி பெறப்பட்டதா?

தீர்த்தவாரி நிகழ்ச்சிக்கு முன்கூட்டியே போலீஸ், தீயணைப்பு துறையிடம் கோவில் நிர்வாகம் சார்பில் அனுமதி பெறப்பட்டதா? குளத்தில் ஆழம் எதுவும் தெரியாமல் எப்படி குளத்தின் நடுவே சென்றார்கள்? நீச்சல் தெரியாதவர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதி செய்யாதது ஏன்? என்பது போன்ற பல்வேறு கேள்விகளை கோவில் நிர்வாகிகளிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

பலியானவர்கள் இளம்வயதினர் என்பதால் வேதனை

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த மூவரசம்பட்டு பகுதியை சேர்ந்த சுரேஷ் கூறும்போது, "தீர்த்தவாரி முடியும்போதுதான் சங்கிலிபோல் கைகளை பிடித்தபடி கடைசியாக நின்றிருந்தவர் நீரில் மூழ்கினார். அவரை காப்பாற்ற முயன்ற மற்ற 4 பேரும் அடுத்தடுத்து நீரில் மூழ்கி பலியாகிவிட்டனர். அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து 4 பேரையும் பிணமாகத்தான் மீட்க முடிந்தது. அதிலும் ஒருவர் உடலை மீட்க முடியவில்லை. தீயணைப்பு வீரர்கள் வந்து மீட்டனர்.

குளத்தின் முன்பகுதி படிக்கட்டுகளுடன் சமமாக இருக்கும். உள்ளே செல்ல செல்ல ஆழம் அதிகமாக இருக்கும். பலியான 5 பேரும் இளம்வயதினர் என்பதால் வேதனையாக உள்ளது " என்றார்.

நங்கநல்லூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, "குளத்தில் மூழ்கும் போது 4 பேரின் சத்தம் கேட்டு பதறி வந்தோம். ஆனாலும் அவர்களை உயிருடன் மீட்க முடியவில்லை. 4 பேரின் உடல்களை மீட்டாலும், ஒருவர் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதால் முடியவில்லை. வருங்காலத்தில் இதுபோல் நடக்காமல் உரிய பாதுகாப்புடன் நடத்த வேண்டும்"என்றார்.

பதைபதைக்க வைக்கும் வீடியோ

தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது சாமி சிலையுடன் அர்ச்சகர்கள் குளத்தில் மூழ்கி எழும்பும் வீடியோ வெளியாகி உள்ளது.

அதில் தன்னார்வலர் ஒருவர் நீரில் மூழ்கி தத்தளித்துக்கும் காட்சியும், பின்னர் அவர் நீரில் மூழ்கும் காட்சியும் பதை பதைக்க வைக்கும் வகையில் உள்ளது.


Next Story