கடன் தொல்லையால் விபரீதம்: தந்தை, மனைவி, மகனை கொன்று என்ஜினீயர் தற்கொலை


கடன் தொல்லையால் விபரீதம்: தந்தை, மனைவி, மகனை கொன்று என்ஜினீயர் தற்கொலை
x

சேலத்தில் கடன் தொல்லையால் தந்தை, மனைவி, மகனை கொன்றுவிட்டு ‘சாப்ட்வேர்’ என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சேலம்,

சேலம் கோரிமேட்டை அடுத்த எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சிவராமன் (வயது 85). பெங்களூரு விமான நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி இறந்துவிட்டதால் வசந்தா (75) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகன் திலக் (38). 'சாப்ட்வேர்' என்ஜினீயரிங் படித்துள்ள இவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கொரோனா காலக்கட்டத்தில் வெளிநாட்டில் இருந்து சேலம் திரும்பிய அவர் தனது பெற்றோர் வீட்டில் இருந்தவாறு வேலை செய்து வந்தார். திலக்கிற்கு மகேஸ்வரி (33) என்ற மனைவியும், சாய் கிறிஷ்சாந்த் (6) என்ற மகனும் இருந்தனர்.

வாய் பேசமுடியாத சிறுவன்

இதற்கிடையில் சாய் கிறிஷ்சாந்த் வாய் பேசமுடியாமல் இருந்து வந்ததால் பெற்றோர் அவனை அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் அவனுக்கு குணமாகவில்லை என தெரிகிறது. மேலும் சிறுவனுக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்தது. ஒரே மகன் என்பதால் திலக், மகேஸ்வரி ஆகியோர் அதிக பாசத்துடன் வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை திலக், மகேஸ்வரி ஆகியோர் கடைக்கு சென்றுவிட்டு பொருட்களை வாங்கி கொண்டு வீடு திரும்பினர். பின்னர் அனைவரும் இரவில் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனர். வீட்டின் மேல் மாடியில் திலக், மகேஸ்வரி, மகன் சாய் கிறிஷ்சாந்தும், கீழ் வீட்டில் சிவராமன், அவருடைய மனைவி வசந்தா ஆகியோரும் தூங்கினர்.

இறந்து கிடந்தனர்

நேற்று காலை 6 மணியளவில் அரைமயக்க நிலையில் வசந்தா வீட்டில் இருந்து வெளியே வந்து அக்கம்பக்கத்தினரை அழைத்தார். இதைக்கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது ஒரு அறையில் வாயில் நுரைதள்ளிய நிலையில் சிவராமன் இறந்து கிடந்தார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் மேல்மாடிக்கு சென்று பார்த்தபோது, அங்கு மகேஸ்வரி, சாய் கிறிஷ்சாந்த் ஆகியோர் வாயில் நுரை தள்ளிய நிலையிலும், திலக் தூக்கில் தொங்கிய நிலையிலும் அடுத்தடுத்து இறந்து கிடந்தனர்.

அதாவது சிவராமன், திலக், மகேஸ்வரி, சாய் கிறிஷ்சாந்த் ஆகிய 4 பேரும் இறந்து கிடந்தனர். இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிருக்கு போராடிய வசந்தாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

3 பேரை கொன்று தற்கொலை

இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லையால் தந்தை, மனைவி, மகனை கொன்றுவிட்டு என்ஜினீயர் திலக் தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இது ஒருபுறம் இருக்க திலக் வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது அவர் ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் சிக்கியது. அதில், 'நான் பலரிடம் கடன் வாங்கி உள்ளேன். அதில் பாதி பணத்தை திருப்பி செலுத்திவிட்டேன். மீதி கடனை என்னால் திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் நாங்கள் குடும்பத்தினருடன் தற்கொலை செய்கிறோம். மேலும் கடன் வாங்கி மகனுக்கு சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. இதனால் மனவேதனையில் இந்த முடிவை எடுக்கிறோம்' என்று உருக்கமாக எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

விஷமாத்திரை

இதனிடையே தற்கொலை செய்வதற்கு முன் பெங்களூருவில் உள்ள தந்தையின் முதல் மனைவியின் மகன் சந்துருவுக்கு, திலக் 'வாட்ஸ்-அப்'பில் ஒரு தகவல் அனுப்பி உள்ளார். அதில் கடன் தொல்லையாலும், வாய் பேசமுடியாத மகனுக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவதாலும் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகிறோம். இதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சந்துரு உடனடியாக திலக்கின் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவருக்கு போன் செய்து தனது தம்பியின் குடும்பத்தினரை வீட்டில் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.

அதன்படி பக்கத்து வீட்டுக்காரர் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் திலக்கின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அனைவரும் வீட்டில் பேசிக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்பிறகு தான் திலக், தந்தை, தாய், மனைவி, மகனுக்கு விஷமாத்திரை கொடுத்துவிட்டு அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆனால் வசந்தா மட்டும் ஒரே ஒரு மாத்திரை மட்டும் சாப்பிட்டதால் உயிர் பிழைத்துள்ளார்.

மற்றவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மாத்திரைகளை சாப்பிட்டதால் இறந்துள்ளனர். ஒரே குடும்பத்தில் 4 பேர் பலியான சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திலக் வீட்டின் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் இறந்தவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதது காண்போர் கண்களை குளமாக்கியது.

மடிக்கணினி

இதற்கிடையே சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் வசந்தா கண் விழித்து சகஜ நிலைக்கு திரும்பிய பின்னர் அவரிடம் விசாரித்த பிறகே தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் திலக் பயன்படுத்தி வந்த மடிக்கணினியை போலீசார் எடுத்து சென்றுள்ளனர்.

அதில் ஏதாவது தகவல் கிடைக்குமா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடன் தொல்லையால் தந்தை, மனைவி, மகனுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு 'சாப்ட்வேர்' என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலம் கன்னங்குறிச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டமா?

'சாப்ட்வேர்' என்ஜினீயரான திலக் வெளிநாட்டில் இருந்து சேலம் திரும்பியவுடன் வீட்டில் இருந்தவாறு பணிபுரிந்தார். மேலும் ஆன்லைன் வர்த்தகத்திலும் ஈடுபட்டு வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் நண்பர்கள் மற்றும் தெரிந்த நபர்களிடம் கடன் வாங்கினார். ஆனால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்து வந்தனர். ஒரு சிலருக்கு மட்டும் திலக் பணத்தை திருப்பி கொடுத்திருந்தார். மற்றவர்களுக்கு பணத்தை கொடுக்கமுடியவில்லை. மேலும் வாய் பேசமுடியாத தனது மகனை குணப்படுத்த முடியவில்லையே? என்ற ஏக்கமும் திலக்கிற்கு இருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில் அவர் குடும்பத்தினருடன் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த வாரம்தான் சாய் கிறிஷ்சாந்துக்கு திருப்பதியில் மொட்டை போட்டு வந்துள்ளனர்.


Next Story